மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவிகித இட ஒதுக்கீடை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து, திங்கட்கிழமை சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் அரசு அப்பீல் செய்கிறது
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட மத்திய பாடத்திட்டத்துடன் போட்டி போடும் அளவுக்கு தமிழக சமச்சீர் பாடத்திட்டத்தின் தரம் இல்லை. எனவே ஒரே நுழைவுத் தேர்வை அமல்படுத்தினால், தமிழகத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என புகார் சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து ‘நீட்’டில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கவில்லை. எனவே மாநில கோட்டாவில் வரும் மொத்த மெடிக்கல் சீட்களில் 85 சதவிகித இடங்களை தமிழக பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.
ஆனால் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு, ‘சமூக அடிப்படையிலான இட ஒதுக்கீடுக்கு மட்டும்தான் அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறது. இப்படி நிறுவன ரீதியான இட ஒதுக்கீடுக்கு அனுமதி இல்லை. தவிர, சி.பி.எஸ்.இ. மாணவர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் என்பதை சிந்திக்க தமிழக அரசு மறந்துவிட்டது.
இந்த ஒதுக்கீடை அரசின் கொள்கை முடிவு என அரசு தரப்பில் கூறினார்கள். ஆனால் இது தொடர்பாக அமைச்சரவையை கூட்டி எந்த விவாதமும் நடக்கவில்லை. மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் கொடுத்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, அப்படியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி கொள்கை முடிவாகும்?’ என கேள்விகளை எழுப்பிய நீதிபதி, மேற்படி இட ஒதுக்கீடை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, மருத்துவக் கல்வித்துறையில் புயலைக் கிளப்பியிருக்கிறது. காரணம், ஜூன் மாதமே நடைபெற வேண்டிய மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை 85 சதவிகித ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களின் ‘ரேங்க் லிஸ்டை’ வெளியிட அரசு தயாராக இருந்தது. இந்த வழக்கின் தீர்ப்புக்காகவே அது ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது இந்த விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. திங்கட்கிழமை (ஜூலை 17) தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
‘நீட்’ விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடும் நெருக்கடியை கொடுக்கவில்லை என்கிற விமர்சனம் பரவலாக இருக்கிறது. எனவே சட்டரீதியாக இதில் கடுமையாக போராடவேண்டிய கட்டாயத்திற்கு எடப்பாடி அரசு வந்திருக்கிறது. எனவே இதில் அரசு தரப்போ அல்லது சி.பி.எஸ்.இ. மானவர்கள் தரப்போ உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
அதுவரை மருத்துவ சேர்க்கைக்கான மாணவர்களின் ரேங்க் லிஸ்ட் வெளிவருமா? கவுன்சலிங் நடக்குமா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள்!