உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
நாடு முழுவதும் நீட் தேர்வு இந்த ஆண்டு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டதால், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பின்னடைவை சந்தித்தனர். குறிப்பாக மாநில சமச்சீர் கல்வி முறையின் கீழ் படித்த மாணவர்களில் தேர்வானவர்கள் மிக மிகக் குறைவு.
எனவே, நீட் தேர்வில் இருந்து இந்த ஓர் ஆண்டுக்கு விலக்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த தீர்மானமத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதையடுத்து, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதனை எதிர்த்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், நீதிமன்றம் சென்றனர். பலகட்ட சட்டப் போராட்டங்களுக்கு பின், நீட் அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு தனது வாதத்தின் போது, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.
நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. விடுமுறை நாட்களிலும், மருத்துவ கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், விடுமுறை காரணமாக டிடி எடுக்க முடியாதவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை பணமாக செலுத்தலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழக அரசின் மருத்துவத் துறை இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.