Advertisment

என்னைப் போன்று பலரும் திருமுறை கற்க வேண்டும் - ஓதுவார் சுஹாஞ்சனாவுடன் நேர்காணல்

ஓதுவாருக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் பலருக்கும் புரிவதில்லை. பலரும் நாங்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வோம் என்றே நினைக்கின்றார்கள். அர்ச்சகர்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை முடித்த பிறகு நாங்கள் அர்த்தமண்டபத்தில் திருமுறைகள் பாடுவோம்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu's only female odhuvar

Tamil Nadu's only female odhuvar : 1971ம் ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. ஆனால் அன்று அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. கிட்டத்தட்ட 51 ஆண்டுகள் கழித்து இந்த திட்டத்தை அவரின் அரசியல் வாரிசும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். “உரிய தகுதியும் பயிற்சியும்” பெற்ற எந்த நபரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-ல் திமுக அரசு சட்டம் கொண்டு வந்தது. அதன் கீழ் சிலர் நியமிக்கப்பட்ட போதிலும் அதன் பிறகான காலங்களில் போதுமான நியமனங்கள் இல்லாத காரணத்தால் பணி நியமனத்திற்கு பலரும் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 100வது நாளில் 20 ஓதுவார்கள் மற்றும் 24 அர்ச்சகர்களுக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். பத்தாண்டுகளுக்கு பிறகு பதவி ஏற்றிருக்கும் திமுக ஆரம்பம் முதலே கோவில் மற்றும் அறநிலையத்துறை விவகாரங்களில் பல முக்கிய முன்னெடுப்புகளை ஏற்று நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே கோவில் நிலங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும், கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை என்று பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வரிசையில் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற 100வது நாளில் 20 ஓதுவார்கள் மற்றும் 24 அர்ச்சகர்களுக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்த முடிவை பலரும் வரவேற்றனர். சமூக நீதிக்கான முதல்படி என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். அதே வேளையில், பெண் ஓதுவார் நியமனம் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இது குறித்து சுகஞ்சனாவிடம் பேசியது தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

ஓதுவாருக்கும் அர்ச்சகர்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் பலருக்கும் புரிவதில்லை. பலரும் நாங்கள் கருவறைக்குள் சென்று பூஜை செய்வோம் என்றே நினைக்கின்றார்கள். அர்ச்சகர்கள் அபிஷேகம் மற்றும் அலங்காரம் ஆகியவற்றை முடித்த பிறகு நாங்கள் அர்த்தமண்டபத்தில் நின்று தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் ஆகியவற்றை நாங்கள் பாடுவோம் என்று கூறினார் சுஹாஞ்சனா கோபிநாத். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் உள்ளிட்டவர்கள் பாடிய பாடல்களை கோயிலில் பாடுகிறவர்களை ஓதுவாமூர்த்திகள் என்பார்கள்.

கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், இதர பணியாளர்கள் மனமாற பாராட்டியதோடு, கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் வருங்காலத்தில் திருமுறைகள் படிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சிறுவயது முதலே இறைப்பணி மீது தீராத பற்றுக் கொண்ட அவர், 10ம் வகுப்பு முடித்த பிறகு திருமுறைகளை, கரூரில் உள்ள குமார சுவாமிநாத ஐயா என்பவரிடம் முறைப்படி கற்றார். அதற்கு முன்பு கோவில்களில் சிறு சிறு நிகழ்ச்சிகளில் பாடல் பாடிய அவருக்கு குடும்பத்தினரும் அக்கம்பக்கத்தினரும் பெரிய அளவில் உந்து சக்தியாக இருந்துள்ளனர்.

இந்த இறைப்பணிக்கு தேர்வாகியது குறித்து உங்கள் வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனரா என்று கேட்ட போது, கணவர் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே இதற்கு ஆதரவு அளித்தனர். நான் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. உனக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ அதனை நீ தொடர்ந்து செய்யலாம் என்ற ஊக்கம் அளித்து என்னை உற்சாகப்படுத்தியவர்கள் அவர்கள் தான். அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியம் இல்லை. இந்த பேட்டி வாயிலாக நான் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகின்றேன் என்று கூறினார் அவர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதாம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் கோமதி தம்பதியினருக்கு மகளாக பிறந்த இவர் திருமணம் செய்து கொண்டு தற்போது சென்னையில் உள்ள சேலையூர் பகுதியில் வசித்து வருகிறார். ஓதுவார் மற்றும் அர்ச்சகர் பணியிடங்களுக்கு இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என்ற செய்தித்தாள் விளம்பரத்தை பார்த்து இந்த பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளார். ”நேர்காணல், திருமுறைகள் தொடர்பான தேர்வு நடைபெற்றது. அதில் நான் தேர்ச்சி பெற்ற பிறகு முதல்வர் கையால் பணி நியமனம் பெற்றேன்” என்றார்.

மங்கையர்கரசியர் அறநெறி அறக்கட்டளை மூலமாக, கரூரில் உள்ள பரணி பார்க் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஒழுக்கநெறிகளையும், திருமுறை தொடர்பான பாடங்களையும் கற்பிக்கும் அறநெறி ஆசிரியராக பணியாற்றிய அவர் தற்போது மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் திருமுறைகளை பாடும் ஓதுவராக கடந்த சனிக்கிழமை (14/08/2021) முதல் தன்னுடைய இறைப்பணியை துவங்கியுள்ளார்.

என்னைப் போன்று பல பெண்களும் இறைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவரிடம், போதுமான வருமானம் கிடைக்காமல் பணியில் இருந்து விலகினேன் என்று தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் மீண்டும் இந்த இறைப்பணிக்கு வர வேண்டும். கடவுளின் அருள் அவருக்கு நிச்சயமாக இருக்கும் என்று கூறினார். மேலும், நான் எனக்கு கிடைக்கும் வருவாயை பெரிதும் பொருட்படுத்தவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Female Odhuvar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment