Advertisment

ஆகஸ்ட் 18 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் : மார்க்சிஸ்ட் மாநிலக் குழு தீர்மானம்

மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆகஸ்ட் 18 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் : மார்க்சிஸ்ட் மாநிலக் குழு தீர்மானம்

ஆகஸ்ட் 18 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் மாநிலக் குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (04.08.2017) மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழுவின் அறைகூவலுக்கு இணங்க மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து 2017 ஆகஸ்ட் 18 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், தோழர்கள் உள்பட அனைவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்களாகச் சென்று இவ்வியக்கத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய நரேந்திர மோடி அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், உழைப்பாளர்கள், சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மீது மோசமான தாக்குதலை தொடுத்தது. அத்தாக்குதலிலிருந்து மீள்வதற்குள்ளாக மேலும், அதிகப்படியான தொடர் தாக்குதல்களை கட்டவிழ்த்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையை அன்றாடம் தீர்மானிப்பது, சமையல் எரிவாயுக்கான மானியங்களை வெட்டி குறைப்பது, மண்ணெண்ணெய் மானியத்தை குறைப்பது, அனைத்துக்கும் மேலாக ஜி.எஸ்.டி.யை திணித்து அனைத்து பகுதி மக்களது வாழ்வாதாரத்தையும் பறித்துள்ளது.

பொருளாதார தாக்குதல்களை தீவிரப்படுத்திக் கொண்டுள்ள அதே நேரத்தில் மறுபக்கம் மதவெறி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. மாடுகள், ஒட்டகங்கள் உள்ளிட்டவைகளை இறைச்சிக்கு விற்க கூடாது என புதிய விதிகளை உருவாக்கி விவசாயிகளது வாழ்வாதாரத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளதோடு மறுபக்கம் மாட்டிறைச்சி உணவு உட்கொள்ளும் மக்களின் உணவு உரிமையையும் பறித்துள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பினர் சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் மோசமான வறட்சிக்கு போதிய நிதியினை மத்திய அரசு வழங்கிடவில்லை. காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க மறுத்தது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக மாணவர்களது மருத்துவ படிப்பில் மண்ணைப்போடும் வகையில் நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது. இத்தகைய தமிழக விரோத மத்திய அரசின் நடவடிக்கைகள தட்டிக்கேட்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது மட்டுமின்றி மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாகவே தமிழக அரசு மாறியுள்ளது.

கிரானைட், தாதுமணல் கொள்ளைகள் குறித்து விசாரணைக்குழுக்களின் அறிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்த மக்களின் போராட்டங்கள் நீண்டு நீடித்து வருகின்றன. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பை சீர்குலைக்க புகுத்தியுள்ள நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்கிட வேண்டும்.

கடலூர், நாகை மாவட்டங்களில் தமிழக அரசு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ரசாயன சிப்காட் செயல்பட்டு வரும் கடலூர் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதியாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேற்கண்ட பெட்ரோ கெமிக்கல் மண்டல அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளிடம் கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தி பொதுமக்களது ஒப்புதலின்றி மேற்கண்ட திட்டத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

தமிழக அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்து வருகின்றன. ஊழல் நடவடிக்கைகளின் விளைவாக சொத்துகள் முடக்கப்பட்டுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும், விசாரணை முடியும் வரை அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும், இதர அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி போராடியதற்காக பல்வேறு வழக்குகள் மற்றும் குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் இறுதி நாளான 2017 ஆகஸ்ட் 23 அன்று தமிழகம் முழுவதும், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்திட மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.

மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் மதவெறி நடவடிக்கைகளை எதிர்த்தும், பசு பாதுகாப்பு குழு என்ற பெயரில் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை எதிர்த்தும், ஆர்.எஸ்.எஸ்-ன் கலாச்சார பாதுகாப்பு படைகளை தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கூட்டங்களில் மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் பங்கேற்கச் செய்து மதவெறி எதிர்ப்பு குரலை வலுப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. நடைபெறும் இப்பேரியக்கங்களுக்கு தமிழக பொதுமக்கள் அனைவரும் பேராதரவு அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

G Ramakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment