மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு: ரவிகுமார் எம்.பி. முயற்சிக்கு ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா?

ரவிக்குமாரின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஒரே நேரத்தில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

By: Updated: July 31, 2019, 05:43:36 PM

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதியின் எம்.பி-யுமான ரவிக்குமார் மக்களவையில் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த கவன ஈர்ப்பு தீர்மானம் என்னவென்றால், “வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு அளிக்கப்பட வேண்டும்” என்பதுதான். ரவிக்குமாரின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு வரவேற்பும் விமர்சனமும் வந்த வண்ணம் உள்ளன.

பொதுவாக மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வாக காணப்படுகிறார்கள். அந்த நாட்களில் அவர்கள் வழக்கமான வேலைகளை செய்யும்போது சிரமத்துக்குள்ளாகிறார்கள் என்ற கருத்து உள்ளது. அதனால், பெண்கள் நலனையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்று ரவிக்குமார் குறிப்பிட்டிருந்தார்.

இது வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. ரவிக்குமாரின் இந்த கருத்து குறித்து சிலர், “ஆம்! மாதவிடாய் நாட்களில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வடைகிறார்கள். அதனால், அந்த மூன்று நாட்களில் விடுப்பு அளிக்கலாம் என்பது வரவேற்கத் தக்கதுதுதான்” என்று சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

சிலர் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிப்பது என்பது அந்தக் காலத்தில், பெண்களை அந்த மூன்று நாட்கள் ஒதுக்கி வைக்கும் பிற்போக்கான முறைக்கே கொண்டு செல்லும். அதனால், விடுப்பு அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், எழுத்தாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அ.மார்க்ஸ், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற ரவிக்குமாரின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அ.மார்க்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “பாருங்க சார் பாருங்க. அசந்தா நம்மளை வேத காலத்துக்கே கொண்டு போயிடுவாங்க போல இருக்கே..

திமுக எம்.பி ரவிக்குமார் எப்படியானவர் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர் வி.சி.கவில் இருந்து கொண்டு தி.முக. எம்பியாக இருப்பதே போதும்.

ஆர்.எஸ்.எஸ் டாருண் விஜயின் நண்பரான இவர் நாடாளுமன்றத்துக்குச் சென்ற பின் முன்மொழியும் தீர்மானங்கள், சட்டத் திருத்தங்கள் எல்லாவற்றையும் பாருங்களேன். மிக மோசமாக அதிகாரக் குவியலை மோடி அரசு செய்து கொண்டிருக்கும்போது உப்புச் சப்பு இல்லாத அசட்டு விஷயங்களை எல்லாம் அவர் முன்மொழிவது நகைச்சுவை. இதன் மூலம் அவர் தன் இந்துத்துவா நண்பர்களை குஷிப் படுத்திக் கொண்டுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

இப்போது அவர் கோரி இருப்பது “மாதவிடாய் நேரத்திற்காக பெண்களுக்கு மாதம் 3 நாட்கள் விடுப்பு கூடுதலாகத் தர வேண்டும் என்பது.

இன்று அறிவியல் பெரிய அளவில் முன்னேறியுள்ளது மாதவிடாய் காலங்களில் நேப்கின்கள் அணிந்து கொண்டு ஓட்டப் பந்தயம் வரைக்கும் கலந்து கொள்ளலாம் என்கிற அளவில் பேசப்படும் காலத்தில் இந்தியச் சனாதன ஆணாதிக்கச் சமூகத்தில் வேத காலம் முதல் இருந்துவந்த ஒரு பழக்கத்தை — அதாவது மாதவிடாய் எனச் சொல்லி மாதம் மூன்று நாட்கள் வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைக்கும் ஒரு பழக்கத்தை அவர் இன்று மீட்க முயற்சிப்பது யாரை குஷிப் படுத்த என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

இது எப்படியான பின்விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும்- ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அலுவலகங்களில் இப்படி மூன்று நாட்கள் வராமல் போனவர்கள் பற்றி கிண்டல் அடிப்பது உட்பட ஆணாதிக்கச் சமூகம் இதை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும்?

வேண்டுமானால் பெண்களின் இந்த தனித்துவமான பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு ஆண்களுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் கேசுவல் லீவ் என்றால் பெண்களுக்கு 15 நாட்கள் அல்லது 20 நாட்கள் என்பதுபோலக் கொண்டுவரலாம்.” என்று விமர்சனம் செய்துள்ளார்.

அதே நேரத்தில் ரவிக்குமாரின் கருத்து பெண்களிடம் இருந்து வரவேற்பையும் பெற்றுள்ளது. ரவிக்குமாரின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வரவேற்பதாக கூறிய வழக்கறிஞர் அஜிதா ஐ.இ தமிழுக்கு கூறுகையில், “வேலைக்குச் செல்லும் மகளிருக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற ரவிக்குமாரின் இந்த கவனஈர்ப்பு தீர்மானம் வரவேற்கக் கூடியது. அந்தக் காலங்களில் பெண்கள் பிரசவத்துக்கு பிறகு அடுத்த இரண்டு மூன்று நாட்களிலேயே அவர்களுடைய அன்றாட வேலைகளை செய்யத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், தற்போது அவர்களின் ஆரோக்கியம் கருதி பெண்களுக்கு பேறுகால விடுமுறை 6 மாதங்கள் வரை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு இப்படியான சலுகைகளை நமது அரசியலமைப்புச் சட்டமே வழங்கலாம் என்று கூறுகிறது.

அதே போல, மாதவிடாய் நாட்களில் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து பணிகளையும் செய்கின்றனர். அதே நேரத்தில் மாதாவிடாய் நாட்களில் பெண்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்வாகவும் காணப்படுகின்றனர். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் ரத்த சோகை நோய் அதிக அளவில் உள்ளன. இந்த ரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்தான். அதனால், அவர்களின் உடல், மன ஆரோக்கியத்தை  கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கலாம். இதை நான் வரவேற்கிறேன்.

ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிப்பது கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாக்கப்படும் என்று வாதிட்டால், இப்போது மட்டும் அந்த நாட்களில் அவர்கள் கிண்டல் செய்யப்படவில்லையா என்ன? அப்படியானவர்களை, சமூகம் புறக்கணித்து செல்லும். அவர்களுடைய தாய், சகோதரி, மனைவி, மகள் அனைவரும் பெண்கள்தான். அவர்களுக்கும் இப்படி உடல் ரீதியாக மாதவிடாய் இயல்பாக நிகழக் கூடியதான் என்றும் பெண் சமூக உற்பத்தியில் ஈடுபடுவதால் அவளுக்கு இது ஏற்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், இந்த பிற்போக்கான கேலி கிண்டல்களை பற்றி அச்சப்பட வேண்டியதில்லை.” என்று கூறினார்.

ரவிக்குமாரின் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் ஒரே நேரத்தில் வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ள நிலையில், அண்மையில், கேரளாவில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த ஊழியர் ஒருவர் “இது ஒரு சிறப்பான அறிவிப்பு என்றும் இதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் தங்கள் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. ஏனென்றால், இந்த மகிழ்ச்சி விடுமுறை கிடைக்கிறது என்றில்லாமல் நீங்கள் புரிந்து கொள்ளப்படுகீறீர்கள் என்ற உணர்வால் வரும் மகிழ்ச்சி” எனக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Menstrual leave for working women debate on vck mp ravikumar initiation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X