விஜய்-யின் மெர்சலுக்கு எதிராக பாஜக தலைவர்கள் பொங்கியிருக்கும் சூழலில், அந்தக் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான காயத்ரி ரகுராம் கருத்து வேறு மாதிரி இருக்கிறது.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு விளம்பரமோ, புரமோஷனோ தேவையில்லாத சூழலை அரசியல்வாதிகள் உருவாக்கியிருக்கிறார்கள். மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் பொய்யான தகவல்கள் அடிப்படையில் விமர்சனம் வைப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்தக் காட்சிகளை நீக்கவும் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட தலைவர்கள் பாஜக-வை கண்டித்து வருகிறார்கள். ‘கருத்து சுதந்திரம் மீதான தாக்குதலாக’ இதை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். கமல்ஹாசன் உள்பட திரையுலக பிரமுகர்கள் பலரும் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
காயத்ரி ரகுராம் வெளியிட்ட ட்வீட்...
It's just a movie, just a role and actors don't write dialogue. Everyone has opinion. Let's not blame the actor. Movie cleared the censor. https://t.co/izcfyDIxqB
— Gayathri Raguramm (@gayathriraguram) October 20, 2017
இந்தச் சூழலில் தமிழக பாஜக-வின் கலைப் பிரிவு செயலாளர்களில் ஒருவரும் நடன இயக்குனர் மற்றும் நடிகையுமான காயத்ரி ரகுராம், விஜய்-க்கு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறார். பாஜக-வினரின் எதிர்ப்பு குறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த காயத்ரி ரகுராம், ‘இது ஒரு சினிமா மட்டும்தான். நடிகர்கள் அதில் நடிக்கிறார்களே தவிர, வசனம் எழுதுவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. இதில் நாம் நடிகரை குறைகூறாமல் இருப்போம். இந்தப் படம் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டது’ என குறிப்பிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.
அதாவது, அந்தப் படத்தில் நடித்த விஜய்-யை விமர்சிப்பதில் நியாயமில்லை என்பதையும், படத்தின் மூலமாக கருத்து கூறும் உரிமை இருக்கிறது என்பதையுமே தனது பதிவில் உணர்த்தியிருக்கிறார் காயத்ரி ரகுராம். தவிர, படம் ஏற்கனவே சென்சார் ஆகிவிட்டதால், அதிலிருந்து காட்சிகளை நீக்கக் கோருவது நியாயமில்லை என்பதாகவும் அவரது கருத்து இருக்கிறது.
பாஜக தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் மெர்சலுக்கு எதிராக தீவிரமாக கருத்துகளை கூறி வரும் நிலையில், அதே பாஜக-வில் பொறுப்பில் இருந்து வரும் காயத்ரி ரகுராம் நடிகர் விஜய்-க்கு ஆதரவாக கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘சேரி பிஹேவியர்’ என பேசியதன் மூலமாகவும் பாஜக-வுக்கு தர்மசங்கடத்தை காயத்ரி உருவாக்கியதாக அப்போது சர்ச்சை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
காயத்ரி ரகுராமின் ‘ட்வீட்’டுக்கு தனது ட்விட்டர் தளத்தில் பதில் தெரிவித்த ஹெச்.ராஜா, ‘இந்தப் படத்தை சென்சாரில் அனுமதித்தவர்களின் தகுதி குறித்தும் சந்தேகம் வருகிறது’ என கூறியிருக்கிறார். எனினும் காயத்ரி ரகுராமுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடை இதுவரை பாஜக தலைவர்கள் யாரும் வெளிப்படுத்தவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.