‘இன்று பராசக்தி வெளியானால்?’ : மெர்சல் சர்ச்சையில் ப.சி-க்கு ஹெச்.ராஜா பதிலடி

விஜய்-யின் ‘மெர்சல்’ விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு ஹெச்.ராஜா பதில் கொடுத்தார். ‘இன்று பராசக்தி படம் வெளியானால்?’ என்கிற கேள்விக்கு அதில் பதில் இருக்கிறது.

By: Published: October 21, 2017, 10:50:06 AM

விஜய்-யின் ‘மெர்சல்’ விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்துக்கு ஹெச்.ராஜா பதில் கொடுத்தார். ‘இன்று பராசக்தி படம் வெளியானால்?’ என்கிற கேள்விக்கு அதில் பதில் இருக்கிறது.

விஜய்-யின் மெர்சல் திரைப்படம், அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களை படத்தில் தாக்கி காட்சிகள் இருக்கின்றன. அதில் சொல்லப்படும் கருத்துகள் உண்மையில்லை என தமிழக பாஜக தலைவர்கள் ஆவேசமாக கருத்து கூறி வருகிறார்கள்.

விஜய் இதனால் தர்மசங்கடமான சூழலில் இருக்கிறார். ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இருமுறை சந்தித்து, மெர்சலுக்கு ரிலீஸ் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டார் விஜய். இப்போது இந்தப் படம் மத்திய அரசை ஓவராக அட்டாக் செய்வதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுமே நெருக்கடியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாற்கள். ஹெச்.ராஜா, ‘ஜோசப் விஜய்’ என விஜய்-யை மதரீதியாக அடையாளப்படுத்தினார். விஜய் தனது கிறிஸ்தவ மதப்பற்று காரணமாகவே மோடி அரசை எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார் ஹெச்.ராஜா.

ஹெச்.ராஜா ட்வீட்…

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மெர்சல் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.

இதற்கிடையே அரசியல் ரீதியாக பாஜக-வின் எதிர்ப்பாளர்களான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய்-க்கு ஆதரவு கொடுக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘சென்சார் போர்டுக்கு எதிராக தமிழிசை போய் போராடட்டும்’ என்றார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘கருத்து சுதந்திரம் மீது பாஜக குண்டு வீசுகிறது’ என விமர்சித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பு : சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை பாராட்டி டாக்குமென்ட்ரி படங்களை மட்டுமே நீங்கள் தயாரிக்கலாம்’ என மத்திய அரசை கலாய்த்திருக்கிறார் ப.சிதம்பரம். ‘பராசக்தி படத்தை இப்போது வெளியிட முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ப.சிதம்பரம்.

பராசக்தி படம், கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான படம்! ‘கோவில்கள் வேண்டாம் என்று கூறவில்லை. அது கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது என்றுதான் கூறுகிறோம்’ என அதில் வசனம் வரும். தவிர, கடவுள் பேசியதாக கூறுவதை கடுமையாக சாடியும் அதில் காட்சிகள் உண்டு. ‘அரசின் கொள்கைத் திட்டங்களை விமர்சிப்பதையே தாங்க முடியாத பாஜக-வினர், பராசக்தி மாதிரியான கடவுள் மறுப்பு கருத்துகளை இப்போது அனுமதிப்பார்களா?’ என்பதையே தனது கேள்விக்குள் அடக்கியிருந்தார் ப.சி.

பொதுவாகவே ப.சிதம்பரத்தின் ஒவ்வொரு ‘ட்வீட்’டுக்கும் உடனுகுடன் தனது ட்விட்டரில் பதில் கொடுத்துவிடும் ஹெச்.ராஜா இதற்கும் பதில் அளித்திருக்கிறார். அதில், ‘திரு.ப.சி. அவர்களே, இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று மக்கள் அரசை கோவிலிலிருந்து வெளியேற்றுவர்’ என கூறியிருக்கிறார் ஹெச்.ராஜா.

விஜய் கடைசியில் அரசியல் சண்டைக்கு நெய் வார்த்து, மெர்சலாக்கி விட்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் நடக்கும் சண்டைகளில் பிரதான இடம் மெர்சலுக்குத்தான்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Mersal controversy h raja answer to p chidambaram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X