மெர்சல் விவகாரத்தில் ‘டிவிட்டரில்’ கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், ‘பட அதிபர்கள் இனி அரசை பாராட்டி டாக்குமென்ட்ரி மட்டுமே எடுக்கலாம்’ என கலாய்த்திருக்கிறார்.
மெர்சல் திரைப்படம், அரசியல் ரீதியாக பலத்த விவாதங்களை கிளப்பிவிட்டது. மத்திய அரசின் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா ஆகிய திட்டங்களை படத்தில் தாக்கி காட்சிகள் இருக்கின்றன. அதில் சொல்லப்படும் கருத்துகள் உண்மையில்லை என தமிழக பாஜக தலைவர்கள் ஆவேசமாக கருத்து கூறி வருகிறார்கள்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘விஜய், கமல்ஹாசன் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை. ஆனால் பொய்யான தகவல்களை சினிமாவில் கூறி, மத்திய அரசு மீது வெறுப்பை ஏற்படுத்தி வர நினைக்கக்கூடாது’ என்றார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘விஜய் முதலில் தனது படத்தின் டிக்கெட்டை உரிய விலைக்கு விற்க நடவடிக்கை எடுப்பாரா? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார், அதற்கு முறையாக வரி கட்டுகிறாரா?’ என கேள்விகளை அடுக்கினார். பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘ஜோசப் விஜய்’ என விஜய்-யை மதரீதியாக அடையாளப்படுத்தினார். அதனாலேயே மோடி அரசை விஜய் எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார் ஹெச்.ராஜா.
ப.சிதம்பரம் வெளியிட்ட ட்வீட்...
Notice to film makers: Law is coming, you can only make documentaries praising government's policies.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 21, 2017
பாஜக தலைவர்கள் இப்படி பிரித்து மேய்வதால், இயல்பாகவே காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய்-க்கு ஆதரவு கொடுக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘சென்சார் போர்டுக்கு எதிராக தமிழிசை போய் போராடட்டும்’ என்றார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘கருத்து சுதந்திரம் மீது பாஜக குண்டு வீசுகிறது’ என விமர்சித்தார்.
கருத்து நாயகனாக அவதாரம் எடுத்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன், ‘கருத்துக்களை பேச விடுங்கள். எதிர்கருத்துகளை தர்க்க ரீதியாக நீங்களும் வைக்கலாம். அப்போதுதான் இந்தியா ஒளிரும்’ என மெர்சலுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட சிலர் இதில் இன்னும் கருத்து கூறவில்லை.
இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பு : சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை பாராட்டி டாக்குமென்ட்ரி படங்களை மட்டுமே நீங்கள் தயாரிக்கலாம்’ என மத்திய அரசை கலாய்த்திருக்கிறார் ப.சிதம்பரம்.
இன்னொரு பதிவில், ‘இன்றைய சூழலில் பராசக்தி படம் வெளியிட அனுமதி கொடுப்பார்களா?’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார் ப.சிதம்பரம். கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய அந்தப் படத்தில், ‘கோவில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது’ என வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெர்சல் விவகாரத்தில் விஜய்-க்கு ப.சிதம்பரம் கொடுத்திருக்கும் இந்த ஆதரவு, தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தடுத்து பாஜக-வுக்கு எதிரான இதர தேசிய தலைவர்களும் மெர்சலுக்கு ஆதரவாக அணி வகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.