விஜய்-யின் மெர்சல்-க்கு ராகுல் காந்தி வாய்ஸ் கொடுத்திருக்கிறார். ‘மிஸ்டர் மோடி, தமிழர்களின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’ என கூறியிருக்கிறார் அவர்.
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்திற்கு விளம்பரமோ, புரமோஷனோ தேவையில்லாத சூழலை அரசியல்வாதிகள் உருவாக்கியிருக்கிறார்கள். மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் பொய்யான தகவல்கள் அடிப்படையில் விமர்சனம் வைப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாற்கள். ஹெச்.ராஜா, ‘ஜோசப் விஜய்’ என விஜய்-யை மதரீதியாக அடையாளப்படுத்தினார். விஜய் தனது கிறிஸ்தவ மதப்பற்று காரணமாகவே மோடி அரசை எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார் ஹெச்.ராஜா.
ராகுல் காந்தி ட்விட்டரில் மெர்சலுக்கு ஆதரவு
Mr. Modi, Cinema is a deep expression of Tamil culture and language. Don't try to demon-etise Tamil pride by interfering in Mersal
— Office of RG (@OfficeOfRG) October 21, 2017
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மெர்சல் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே அரசியல் ரீதியாக பாஜக-வின் எதிர்ப்பாளர்களான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய்-க்கு ஆதரவு கொடுக்கின்றன. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ‘சென்சார் போர்டுக்கு எதிராக தமிழிசை போய் போராடட்டும்’ என்றார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘கருத்து சுதந்திரம் மீது பாஜக குண்டு வீசுகிறது’ என விமர்சித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பு : சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை பாராட்டி டாக்குமென்ட்ரி படங்களை மட்டுமே நீங்கள் தயாரிக்கலாம்’ என மத்திய அரசை கலாய்த்திருக்கிறார் ப.சிதம்பரம். ‘பராசக்தி படத்தை இப்போது வெளியிட முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ப.சிதம்பரம்.
இதேபோல காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூவும் மெர்சல் விவகாரத்தில் பாஜக-வை கடுமையாக கண்டித்தார். பாஜக-வுக்கு எதிரான தலைவர்களின் அடுத்தடுத்த கண்டனங்களைத் தொடர்ந்து மெர்சல் விவகாரம் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதில் முக்கிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரான ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இது குறித்து கருத்து கூறியிருக்கிறார்.
அதில், ‘மிஸ்டர் மோடி’ என ஆரம்பித்திருக்கும் ராகுல் காந்தி, ‘தமிழ் கலாச்சாரம், மொழி ஆழம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் திரைப்படம். மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர்களின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்கள் தலையிட்டு இதில் கருத்து கூறி வருவதால், இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ராகுல் காந்தி, நேரடியாக பிரதமர் மோடியை குறிப்பிட்டி ட்வீட் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.