விஜய்-யின் மெர்சல் பிரச்னையில் ராகுல் காந்திக்கு பதில் ‘ட்வீட்’ போட்டிருக்கும் தமிழிசை செளந்தரராஜன், ராகுல் பாணியிலேயே இன உணர்வை கிளறி விட்டார்.
விஜய்-யின் மெர்சல், அகில இந்திய அளவில் அரசியல் விவாதம் ஆகியிருக்கிறது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் தவறான தகவல்கள் அடிப்படையில் விமர்சனம் வைத்திருப்பதாக பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாற்கள். ஹெச்.ராஜா, ‘ஜோசப் விஜய்’ என விஜய்-யை மதரீதியாக அடையாளப்படுத்தினார். விஜய் தனது கிறிஸ்தவ மதப்பற்று காரணமாகவே மோடி அரசை எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார் ஹெச்.ராஜா.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மெர்சல் காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை அதிகாரபூர்வமாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.
தமிழிசையின் ட்விட்டர் பதிவு
உங்கள் காங்கிரஸ் ஆட்சியின்துணையோடு இலங்கையில்எம்தமிழர்கள்கொத்துகொத்தாக கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்.... https://t.co/Py9s8yUpP4
— Tamilisai Soundrajan (@drtamilisaibjp) October 21, 2017
இதற்கிடையே அரசியல் ரீதியாக பாஜக-வின் எதிர்ப்பாளர்களான காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய்-க்கு ஆதரவு கொடுக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘படத் தயாரிப்பாளர்களுக்கு அறிவிப்பு : சட்டம் வருகிறது, அரசின் கொள்கைகளை பாராட்டி டாக்குமென்ட்ரி படங்களை மட்டுமே நீங்கள் தயாரிக்கலாம்’ என மத்திய அரசை கலாய்த்திருக்கிறார். ‘பராசக்தி படத்தை இப்போது வெளியிட முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியிருந்தார் ப.சிதம்பரம்.
இதேபோல காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூவும் மெர்சல் விவகாரத்தில் பாஜக-வை கடுமையாக கண்டித்தார். இதில் முக்கிய திருப்பமாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரான ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இது குறித்து கருத்து கூறியிருக்கிறார். அதில், ‘மிஸ்டர் மோடி, தமிழ் கலாச்சாரம், மொழி ஆழம் ஆகியவற்றின் வெளிப்பாடுதான் திரைப்படம். மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர்களின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.
ராகுல் காந்தியின் கருத்தைத் தொடர்ந்து, மெர்சல் விவகாரம் தேசிய முக்கியத்துவம் பெற்றது. ராகுல் காந்தியின் விமர்சனம், பாஜக அகில இந்தியத் தலைவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் ராகுல் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதில் கொடுத்திருக்கிறார்.
அதில், ‘உங்கள் காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு இலங்கையில் எம் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது எங்கே போனீர்கள் ராகுல்....’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் தமிழிசை. தமிழர்களின் மொழி, கலாச்சாரம் குறித்து கவலை எழுப்பி ராகுல் குரல் கொடுத்ததால், அதே பாணியில் தமிழ் இன உணர்வை கிளறும் விதமாக தமிழிசையும் பதில் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக-பாஜக எதிர்ப்பு கட்சிகளின் அரசியல் மோதல் களமாகியிருக்கிறது மெர்சல்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.