தனக்கு தெலைபேசி மூலம் மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மெர்சல் பட விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும், தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்குக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். பாஜக-வானது தமிழகத்தில், நடிகர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் விஜய் மூலமாக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை. திருமாவளவன் தான் கட்டப்பஞ்சாயத்து மூலமாக கட்சி அலுவலத்தை வளைத்துப் போட்டுள்ளார் என்று விமர்சித்தார்.
தமிழிசையின் இந்த விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலளிக்கையில், ஒரு பண்பாடு மிக்க தலைவரின் வாரிசு ஒருவர் இவ்வாறு பேசுவது என்பது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், தனக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது: நேற்று மாலை வரை தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்ட மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். சமூகவலைதளங்கள் வாயிலாகவும், தொலை பேசி வாயிலாகவும் என்னை விமர்சிப்பது என்பது தவறான அணுகுமுறையாகும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன். மெர்சல் குறித்து எனது கருத்தை நான் பதிவு செய்திருந்தேன். அந்த கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன் என்றார்.