தமிழிசை சவுந்தரராஜன் உருவபொம்மையை எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் மெர்சல். பல்வேறு தடைகளை தாண்டி வெளிவந்த இப்படம், ரிலீசான பின்னரும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி, டிஜிடல் இந்தியா குறித்து இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து கூறி வருகின்றனர்.
பாஜக-வின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல், திரையுலகினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, நடிகர் விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையில் பாஜக ஈடுபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால், விஜயை வைத்து அரசியல் செய்வதற்கு தங்களுக்கு அவசியம் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்திருந்தார். மேலும், திருமாவளவன் தான் கட்டப்பஞ்சாயத்து மூலமாக இடத்தை வளைத்துப் போடுபவர் என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜனின் இந்த விமர்சனத்தை கண்டித்து, சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழிசை உருவபொம்மையை எரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை அண்ணாசாலையில் போராட்டம் நடத்தப்பட்டது. மெர்சல் படத்தில் உள்ள காட்சிகளை நீக்க முயற்சி செய்யும் பாஜக-விற்கு கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற செயல் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.