‘மெர்சல்’ படத்தின் தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மனுதாரரிடம் ஏகப்பட்ட கேள்விகளைக் கேட்டு அவரைத் திணறடித்துள்ளனர் நீதிபதிகள்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து குறிப்பிடும் வசனங்களில் இந்தியாவில் கூடுதல் வரியும், சிங்கப்பூரில் குறைவான வரியும் வசூலிக்கப்படுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மருத்துவக் காப்பீட்டுக்கென 8 - 10 சதவித மெடிசேவ் வரி வசூலிக்கப்பட்டே இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவமனைகளிலும், தமிழகத்தில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவசம் இல்லை என உண்மைக்கு புறம்பான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் முதல் பல்வேறு வயதினரும் படத்தை பார்க்கின்றனர், அதில் சொல்லப்பட்ட கருத்துகள் உண்மையா ? என யாரும் ஆராயப்போவதில்லை, மாறாக முழுமையாக நம்பி, அதனடிப்படையில் வரி ஏய்ப்பு செய்யவும் அதிக வாய்ப்புள்ளது. 130 கோடி மக்கள் உள்ள நாட்டில் 2.5 கோடி மக்கள் மட்டுமே வரி செலுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற நிலையில், வரிவிதிப்பு தொடர்பான தவறான தகவல்கள் வரி ஏய்ப்பு மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும். வரிசெலுத்த வேண்டும் என்பதை அரசும், நீதித்துறையும் அழுத்தமாக வலியுறுத்தி வரும் நிலையில், இதுபோன்ற காட்சிகள் உள்நோக்குடன் சேர்க்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா பற்றி தவறான கருத்துகளை கொண்டு செல்லும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பணமே இல்லை, எல்லாமே அட்டைதான் போன்ற கருத்துகளும் அதை தொடர்ந்த வடிவேலுவின் காட்சிகளும் டிஜிட்டல் இந்தியா திட்டம், இந்திய இறையாண்மைக்கும் எதிராக உள்ளன.
இதுபோன்ற காட்சிகளை வெளிநாட்டினரோ, வெளிநாடு வாழ் இந்தியரோ பார்க்க நேர்ந்தால் நாட்டை பற்றிய எதிர்மறையான நினைக்க தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கருப்புப்பண பரிவர்த்தனைகளை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது டிஜிட்டல் இந்தியா திட்டம் என்றாலும், மக்களை அதற்கு மாறச்சொல்லி அறிவுறுத்தப்படுகிறதே தவிர கட்டாயப்படுதப்படவில்லை.
மேலும், ‘மெர்சல்’ படத்தின் தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பித்த ஒரே நாளில் படத்துக்கு சான்று வழங்கப்பட்டதிலிருந்தே, மண்டல சென்சார் வாரியம் மனதை செலுத்தாமல் இயந்திர ரீதியாக முடிவெடுத்திருப்பது தெரியவருகிறது.
இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் காட்சிகள் இருந்தால் 1952-ம் ஆண்டின் சினிமாட்டோகிராப் சட்டத்தில் பிரிவு 5பி(1)ன் படி, படத்தை பொதுவெளியில் வெளியிட தடைவிதிக்கும் அதிகாரம் தணிக்கை வாரியத்துக்கு உள்ளது. ஆனால் நாட்டையும், நாட்டின் வரிவிதிப்பு நடைமுறையையும் தவறாக சித்தரிக்கும் நோக்கிலேயே இதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், படம் திரையிடுவதை தடுக்க வேண்டும். படத்திற்கு தடை விதிக்க வேண்டும். படத்துக்கு அக்டோபர் 16 ஆம் தேதி வழங்கப்பட்ட தணிக்கை சான்றை திரும்பப்பெற மண்டல திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. படத்தில் ஜிஎஸ்டிக்கு எதிரான தகவல் இருப்பதாக மனுதாரர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘திரைப்பட வசனங்களை மக்கள் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வார்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில், நீங்கள் படம் பார்க்காதீர்கள். ‘மெர்சல்’ என்பது படம்தான், நிஜ வாழ்க்கையல்ல ’ எனக் கூறினர்.
‘மெர்சல்’ படத்தால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுநலனில் அக்கறை இருந்தால் மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவது பற்றியோ, குடிக்கும் காட்சிகளுக்கு எதிராகவோ வழக்கு தொடரலாமே என்றும் குறிப்பிட்டனர்.
‘ஒரு படத்தில் வரும் காட்சிகளை அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை தணிக்கை வாரியம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, நீதிமன்றம் அல்ல’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.