எம்.ஜி.ஆர். 101வது பிறந்த நாள் : ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். அளித்த சிறப்புப் பேட்டி

‘பொம்மை’ இதழுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் எடுத்த பேட்டியின் முக்கியமான பகுதிகளை இங்கு பார்ப்போம். இந்தப் பேட்டி, 1968ஆம் ஆண்டு வெளியானது.

எம்.ஜி.ஆரின் முக்கியமான பேட்டிகள் மற்றும் கேள்வி – பதில்களை புத்தகமாகத் தொகுத்துள்ளார் எஸ்.கிருபாகரன். அந்தப் புத்தகத்தில் இருந்து, ‘பொம்மை’ இதழுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரிடம் எடுத்த பேட்டியின் முக்கியமான பகுதிகளை இங்கு பார்ப்போம். இந்தப் பேட்டி, 1968ஆம் ஆண்டு வெளியானது.

கேள்வி : நடிப்புத்துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம்?
பதில் : வறுமை

கேள்வி : உங்கள் பெற்றோர்கள், நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?
பதில் : ‘பசி வந்திடப் பத்தும் பறந்தும் போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க, பசியைப் போக்குவதற்காக நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படி தடை செய்வார்கள்?

கேள்வி : நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்’. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?
பதில் : நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒருவேளை என் விருப்பம் தவறாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையின் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.

கேள்வி : உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
பதில் : என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.

கேள்வி : எப்படிச் சொல்கிறீர்கள்?
பதில் : குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மனநிம்மதி, இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள், என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாக சொல்கிறேன், என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல், சந்தோஷப்பட்டுக்கொண்டா இருப்பார்?

கேள்வி : பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவிவரும் நீங்கள், எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?
பதில் : பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக, தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி : அப்படிப் பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது?
பதில் : கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது, அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர், தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல், எனக்கு ஒருநாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்க முடியாது. ஆனால், அந்த நண்பரைத் தேடித்தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை.

கேள்வி : ஒரு காலத்தில் நடிகன் என்ற நிலையில் நெப்டியூன் ஸ்டுடியோவில் பணியாற்றிய நீங்கள், இப்போது சத்யா ஸ்டுடியோவாக மாறியிருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக உரிமை பெற்றிருக்கிறீர்கள். இந்த மாறுதலைப் பற்றியும், அந்த பழைய நாட்களையும் இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
பதில் : நான் பல பேர்களுக்கு உபதேசம் செய்கின்ற, செய்து கொண்டிருக்கின்ற ஒரே கருத்துதான் என் நினைவில் நின்று கொண்டிருக்கிறது. மனித உடலைப் பற்றிப் பெரியவர்கள் ‘நீரின் மேல் குமிழியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதைவிட ஆபத்தானது, நிச்சயமற்றது ஒரு மனிதனுக்கு சேர்கின்ற பொருளும், புகழும். நான் எந்த ஸ்டுடியோவில் யாரோ ஒருவனாக பணியாற்றினேனோ, அதே ஸ்டுடியோவில் நானே பங்குதாரராக இருப்பது ஒன்றே போதாதா பொருளும், புகழும் நிலையற்றது என்பதை எடுத்துக்காட்ட.

கேள்வி : நீங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்த அனுபவம் நாடக மேடை நடிப்பிலா அல்லது திரைப்பட நடிப்பிலா?
பதில் : நாடக மேடை நடிப்பில். நடிகன் நாடக மேடையில் நடிக்கும்போது அவனுடைய திறமைக்கு உடனடியாக பலனைக் காண்கிறான். அதாவது மக்கள் மகிழ்வதை, அதாவது அவனுடைய திறமையான நடிப்பை ஏற்றுக் கொள்வதை நேரடியாக அனுபவிக்கிறான். அப்படி அனுபவித்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. சினிமாவில் அப்படி இல்லையே…

கேள்வி : தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அத்தனைப் படங்களையும் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை நான் பெற்றவனல்ல. எனவே, பொதுவாக ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது, தெரியாத ஒன்றைப் பற்றி நான் தீர்ப்பு கூறுவதாக முடிந்துவிடலாம். ஆனால், நான் கேள்விப்பட்டதில் இருந்து, மக்கள் சொல்கின்ற கருத்தில் இருந்து பெரும்பாலான படங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வந்த படங்களைவிட தரத்திலும், தகுதியிலும் உயர்ந்ததாக உள்ளன என்பதை சொல்ல முடியும்.
முன்னேற்றம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு பதில் சொல்வது இயலாத ஒன்று. ஏனெனில், ஒரு தொழிலின் முன்னேற்றம் என்பது பல்வேறு வகையான, வெவ்வேறு தொடர்பான செயலிலிருந்து, விளைவிலிருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். உதாரணத்திற்கு, ஒரு சினிமாப் படத்தை எடுத்துக் கொண்டால் உரையாடல், காட்சிகள், இசையமைப்பு, நடிப்பு, பாத்திரத்திற்கேற்ற உடைகள், காட்சி ஜோடனை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இயக்குதல் முதலியவைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக முன்னேற்றம் ஏற்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் இயற்கை.
குறிப்பாக, சினிமாப் படங்களின் முன்னேற்றம் என்றால், இவை அத்தனையும் சேர்த்துதான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மேலே சொன்னவைகளில் ஒன்றில் முன்னேற்றம் என்று கூறினாலும் அது சினிமா தொழிலுக்கே முன்னேற்றமாகத்தான் கருத வேண்டும். அந்த வகையில் ஒலி, ஒளி, காட்சி ஜோடனை, ஒப்பனை, நடிப்பு, கதை, இசை, உரையாடல், படத்தொகுப்பு, பதிப்பு முதலிய பல்வேறு வகைகளில் தமிழகம் சினிமாத்துறையில் நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.

கேள்வி : சினிமாவை நீங்கள் ஒரு கலை என நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?
பதில் : ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால், சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அதுபோல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறுவிளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.

கேள்வி : ஆடு, மாடு, கோழி மனிதனுக்கு இம்சை செய்வதில்லை. அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் இல்லையா?
பதில் : உங்களுடைய கேள்வியிலிருந்து மனிதனுக்கு இம்சை செய்கின்றவைகளைக் கொன்று சாப்பிடலாம் என்ற பொருளும் தொக்கி நிற்கிறது என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அப்படியானால், உயிர்ப் பிராணிகளையே கொன்று தின்பது தவறு என்று உங்கள் கேள்வியில் கருத்து வெளிப்படவில்லை. தீங்கு செய்யும் பிராணிகளைக் கொன்று தின்னலாம் என்ற கருத்தாகிறது. அப்படியானால், தீங்கு செய்கின்ற மனிதனையே ஏன் மனிதன் கொன்று தின்னக்கூடாது? இதை வேடிக்கையாகத்தான் கேட்கிறேன். கொல்லாமை, புலால் உண்ணாமை இவை எல்லாம் மனத்தின் பழக்கத்தைப் பொறுத்தது. புலால் உணவு உண்பவர்களிலேயே பலர் சிலவற்றை உண்கிறார்கள், சிலவற்றை உண்பதில்லை. இவை எல்லாம் மனப்பழக்கத்தின் விளைவாக ஏற்படுகின்ற பழக்க வழக்கங்களாகும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close