எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை அழைக்க ஓ.பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்கிறார்.
எம்.ஜி.ஆர். 101-வது பிறந்த நாள் விழா இன்று (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு முழுவதும் மாவட்ட வாரியாக தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக விழாக்கள் முடிந்ததும் மாநில அளவில் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை ஜனவரி இறுதியில் சென்னையில் தமிழக அரசு சார்பில் கொண்டாடுகிறார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் தனித்தனியாக இயங்கியபோது இரு தரப்புமே தங்கள் சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மோடியை அழைத்தனர். அப்போது மோடி யாருக்கும் அதிகாரபூர்வமாக ஒப்புதல் கொடுக்கவில்லை.
தற்போது அணிகள் இணைந்துவிட்ட நிலையில் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மோடி நிச்சயம் வருவார் என எதிர்பார்க்கிறார்கள். மோடியை மட்டுமல்லாது, இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் அழைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக இன்று (ஜனவரி 17) மாலையில் டெல்லி செல்கிறார். அவருடன் அமைச்சர் தங்கமணி, கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரின் அப்பாய்ன்மென்ட் கேட்கப்பட்டிருக்கிறது.
பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் வசதியைப் பொறுத்து அவர்களை ஓபிஎஸ் சந்திப்பார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்துவதன் மூலமாக தொண்டர்கள் பலத்தை காட்டுவதுடன், டெல்லியின் நம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு கருதுவதாக கூறப்படுகிறது.