பள்ளிகளில் யோகா வகுப்புகள் கட்டாயமாகும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜவாஹிருள்ள வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். யோகா வகுப்பு தொடர்பான முதலமைச்சரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது.
தமிழகத்தில் பல்வேறு மத பிரிவினர் வாழ்ந்து வரும் சூழலிலும், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் சூழலிலும், ஒரு மதத்தின் நம்பிக்கையை உடலுக்கும் மனதிற்கு பயிற்சி என்று திணிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.
யோகாவில், சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் சூரியனை கடவுளாக வணங்குவதும், பத்மாஸணம் போன்ற தியான வகுப்பிலும் குறிப்பிட்ட மதத்தில் கூறப்படும் வேத மந்திரங்களை கூறுவதும் உண்டு.
ஒரு மதச்சார்பின்மை நாட்டின் அனைத்து மதத்தினரும் பயிலும் பள்ளிக்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்குகளை கட்டாயமாக திணிப்பது என்பது சட்டப்படியே தவறாகும். எனவே, பள்ளிகளில் யோகா வகுப்புகள் கட்டாயமாகும் என்ற அறிவிப்பை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.