கலப்படம் செய்த பால் நிறுவனங்களின் லிஸ்ட்... ஆதாரத்துடன் வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

உலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்

தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்தன என்பதை ஆதாரத்துடன் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நெஸ்லே, எவ்ரிடே பால் பவுடர் ஆகியவை உலகத் தரம் வாய்ந்தது என விளம்பரப் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நிறுவனங்களின் பால் பவுடரில் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது.

ரிலையன்ஸ் பால் கம்பெனி இந்தியாவில் பிரபலமானது. இந்த பாலிலும் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலந்துள்ளதாக ஆய்வறிக்கை வந்துள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் தான் இந்த பால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

கெட்டுப்போன பாலில் அமிலத் தன்மையை குறைப்பதற்காக காஸ்டிக் சோடாவை சேர்க்கின்றனர். பின்னர் அமிலத் தன்மை குறைந்தவுடன் அவற்றை பாலாக மாற்றாமல், பால் பவுடராக மாற்றிவிடுகிறன்றனர்.
இந்த பால் பவுடரை வாங்கிச் செல்லும் மக்கள் திரும்ப அதை பாலாக்கி, சுடவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.இதனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் வர வாய்ப்புள்ளது.

தற்போது நான் வைத்திருக்கும் இந்த பொருட்களில் காஸ்டிக் சோடா என்பது உள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.பாலில் ரசாயனப் பொருட்கள் இல்லை என சிலர் கூறிவந்தனர். பாலில் ரசாயனம் இருக்கிறது என்பதை நாங்கள் கடினத்துடனே கண்டுபிடித்தோம்.

ஆவின் பால், ஆவின் தயிர், ஆவின் பால் பவுடர் இவற்றையெல்லாம் தனியார் கம்பெனிகள் சோதனை செய்கின்றனர். அவற்றில் ஆவின் பொருட்கள் அனைத்தும் தரமானது என ஆய்வறிக்கையும் கொடுத்துள்ளன.

இந்த விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் அவற்றில் இருந்து அவர்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காதான் இவ்வாறு கூறுவதாக கடந்த மாதமே நான் கூறியிருந்தேன்.

முன்னதாக நான் இவ்வாறு கூறும்போது இதற்கு பல்வேறு எதிர்ப்புள் எழுந்தன. இப்போது மத்திய அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, ஆய்வு பெறப்பட்டுள்ளது. உலகத்தரம் வாய்ந்த கம்கெனிகளில் பால் பொருட்களிலேயே இவ்வளவு கலப்படம் இருக்கும் என்றால், சாதாரண பால் கம்பெனிகளில் எவ்வளவு கலப்படம் இருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

நான் எல்லா கம்பெனிகளும் கலப்படம் செய்கின்றன என ஒருபோதும் கூறியதில்லை. சில பால் கம்பெனிகள் மட்டுமே கலப்படம் செய்கின்றன. பாலில் கலப்படம் குறித்து சோதனை நடத்தப்படுவது குறித்து அறிந்த சில கம்பெனிகள் பாலில் ரசாயன கலப்படத்தை நிறுத்திவிட்டன. ஆனால், மாற்றுவழியாக பால் பவுடரில் கலப்படம் செய்கின்றன.

பாலில் கலப்படம் குறித்து சோதனை நடத்தி அவர்களை கையும் களவுமாக பிடித்தால் கூட, குற்றவாளிகள் அபராதம் கட்டி தப்பிவிடுவார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இவ்வாறு தெரிவிக்கிறேன்.

இந்த பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லக் கூடிய அதிகாரம் என்னிடம் இருந்தால், இப்பொழுதே அதன் மீது தடை விதித்துவிடுவேன். ரசாயனம் கலந்த கம்பெனியின் பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் மீது தடை விதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு.

தற்போதைய நிலவரப்படி, எந்த நிறுவனத்திற்கும் நாங்கள் நற்சான்றிதழ் கொடுக்க விரும்பவில்லை. பின்நாட்களில் அந்த நிறுவனங்கள் ஏதேனும் தவறு செய்தால், நீங்கள் தானே நற்சான்றிதள் கொடுத்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பப்படும் வாய்ப்பு உள்ளது.

முன்னதாக மாதவரம் ஆய்வுமையத்தில் வைத்து பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை ஆய்வு செய்தபோது 4 நிறுவனங்கள் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால்தான், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஆய்வறிக்கையை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

×Close
×Close