குட்கா ஊழலில் அமைச்சர், டிஜிபி பெயர் மிஸ்ஸிங் : வழக்கு போடும் திமுக

குட்கா ஊழலில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தப்ப விடப்பட்டிருப்பதாகவும், கீழ்நிலை அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.

By: October 10, 2017, 11:19:46 PM

குட்கா ஊழலில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தப்ப விடப்பட்டிருப்பதாகவும், கீழ்நிலை அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது குட்கா மற்றும் போதை பாக்கு வகைகளை தடை செய்து உத்தரவிட்டார். ஆனாலும் கடைகளில் அந்தத் தடை முழுமையாக அமுலாக வில்லை. அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆசியுடன் தமிழகம் முழுக்க குட்கா விற்பனை கொடிகட்டிப் பறந்தது.

இந்த நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில குட்கா தயாரிப்பு தொழிற்சாலைகள் வரி ஏய்ப்பு செய்து இருப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் செங்குன்றத்தில் உள்ள குட்கா தயாரிப்பு தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது குட்கா தயாரிப்பு பங்குதாரர்களில் ஒருவர் வீட்டில் டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் குட்கா விற்பனையை இடையூறு இல்லாமல் செய்வதற்கு அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும் முழு விபரமும் இடம் பெற்றிருந்தது.

அந்த லஞ்சத்தை கணக்கிட்ட போது 2015, 2016 ஆகிய 2 ஆண்டுகளில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ரூ.39 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு லஞ்சம் வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அந்த கடிதத்தில் ஒரு அமைச்சர், இரண்டு டி.ஜி.பி. அந்தஸ்து போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இந்த லஞ்ச விவகாரம் தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருந்தது. இது குறித்து வருமான வரித்துறை எழுதிய கடிதம் பற்றிய தகவல்கள் கடந்த ஜூலை மாதம் வெளியானது ஆனால் தலைமைச் செயலாளர் தரப்பில், வருமான வரித்துறையிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என கூறப்பட்டது.

இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு குட்கா விற்பனை மற்றும் லஞ்சம் கை மாறியது பற்றி விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் 2 பிரிவாக விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள்.

இதற்காக வருமான வரித்துறையிடம் இருந்து மீண்டும் தகவல்கள் பெறப்பட்டன. அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் முடிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109-ன் கீழ் உட்பிரிவு 13(1)(ஏ), 13(1)(டி), மற்றும் 13(2) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 17 அதிகாரிகள் குட்கா உற்பத்தியாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. போலீஸ் உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், வணிக வரித்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மத்திய சுங்க வரித்துறை அதிகாரிகளின் பெயர்கள் அந்த 17 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஆனால் குட்கா டைரியில் இடம்பெற்ற அமைச்சர் மற்றும் டிஜிபி பெயர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் இல்லை. இதற்கிடையே அந்த அதிகாரிகளின் பெயர் டைரியில் இடம்பெற்ற பக்கங்களும் காணாமல் போய் விட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘புகாரில், வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி.க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூட முதுகெலும்பு இல்லாத துறையாக லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை மாற்றப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது. டி.ஜி.பி மற்றும் அமைச்சர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்குத் தடையாக இருப்போர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, மாநில விஜிலென்ஸ் கமிஷனர் ஜெயக்கொடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’ என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், ‘குட்கா விவகாரத்தில் அமைச்சர் – காவல்துறை உயரதிகாரிகள் பெயரும் இடம்பெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘குட்கா விவகாரத்தில் சம்பந்தபட்டவர்கள் பதவியில் இருக்கும் வரை விசாரணை நியாயமாக நடைபெறாது’ என்றார்.

எதிர்க்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருவதால், எடப்பாடி அரசுக்கு இது புதிய தலைவலியாக மாறியிருக்கிறது. ஏற்கனவே திமுக எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகன் குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டு தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்திற்கு வந்த ஜெ.அன்பழகன், ‘இந்த விவகாரத்தில் டிஜிபி-யான டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீதும் வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோரிடம் மனு கொடுத்தார்.

இந்த மனுவின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பது திமுக.வின் எதிர்பார்ப்பு இல்லை. இந்த விவகாரத்தையும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல திமுக முடிவு செய்துவிட்டது. அதற்கான பார்மாலிட்டிதான், அந்த மனு கொடுக்கும் படலம்! எனவே அதி விரைவில் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மறுப்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என ஜெ.அன்பழகன் பெயரில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஆக இருக்கிறது.

அடுத்தடுத்து வழக்குகள் மூலமாக ஆட்சிக்கு நெருக்கடி கொடுப்பதுதான் இப்போதைக்கு திமுக.வின் வியூகம்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister and dgp names missing in gutkha scam dmk to approach chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X