ஓபிஎஸ் இல்லாவிட்டாலும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முடியும் : அமைச்சர் சி.வி சண்முகம்

95% நிர்வாகிகளின் ஆதரவு எங்களுக்கே உள்ளது.

அதிமுக அணிகள் இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவை ஓபிஎஸ் கலைப்பதாக அறிவித்தநிலையில், ஓபிஎஸ் அணியினர் இணையாவிட்டாலும் நாங்கள் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓபிஎஸ் என்ன காரணத்திற்காக பேச்சுவார்த்தை குழுவை கலைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் எங்களின் விருப்பமும், தொண்டர்களின் விருப்பம் என்பது இரு அணிகளும் இணைந்து முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதே ஆகும். ஓபிஎஸ் அணியினர் தங்கள் அணியுடன் பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது.

பன்னீர் செல்வம் அணியினர் வந்தால் தான் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முடியுமா?

இப்பொழுது கூட சொல்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். அந்த வகையில் தான் நாங்கள் அவர்களை இணையுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். பன்னீர் செல்வம் அணியினர் தங்களுடன் இணையாவிட்டாலும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முடியும். 95% நிர்வாகிகளின் ஆதரவு எங்களுக்கே உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு நிச்சயமாக இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும்.

அதிமுக பிளவுபடவில்லை. ஓபிஎஸ் பிரிந்து சென்றிருக்கிறார் அவ்வளவு தான். டிடிவி தினகரனை 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்திருப்பார்கள். சிறையில் இருந்து டிடிவி தினகரன் வெளிவந்திருக்கிறார் என்பதால், எம்எல்ஏ-க்கள் நலம் விசாரிக்க சென்றிருக்கிறார்கள். அந்த சந்திப்பில் தவறு ஏதும் இல்லை என்று கூறினார்.

×Close
×Close