Advertisment

கொரோனா பேட்டி கொடுக்க விஜயபாஸ்கருக்கு தடை?

Coronavirus Tamil News: பிரதமர் மோடி, தமிழக சுகாதாரத் துறை இன்னும் முழுமையாக களப்பணியில் இறங்கவில்லை என சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா பேட்டி கொடுக்க விஜயபாஸ்கருக்கு தடை?

Tamil Nadu Coronavirus News: கொரோனா பேட்டி கொடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் தகவல்கள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் பின்னணி குறித்தும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Advertisment

தமிழ்நாட்டில் கொரோனா விவகாரம் தொடங்கியதில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரொம்பவும் பிஸி ஆனார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என தொடர்ந்து ரவுண்ட்ஸ் வந்ததுடன், தினமும் தவறாமல் பேட்டிகளையும் கொடுத்து வந்தார்.

அமைச்சரின் செயல்பாடுகளை ஸ்பெஷலாக சமூக வலைதளங்களில் சிலர் புரமோட் செய்ய ஆரம்பித்தனர். இதன் எதிரொலியாக மலையாளம் உள்ளிட்ட வேறு மொழி மீடியாவிலும் விஜயபாஸ்கரின் தினசரி செயல்பாடுகள் மெச்சப்பட்டன.

இந்தச் சூழலில்தான் கடந்த 28-ம் தேதி முதல் அமைச்சர் விஜயபாஸ்கர், மீடியா பேட்டியை தவிர்த்து வருகிறார். தினமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, மருத்துவமனை விசிட்கள் பற்றி ட்வீட் செய்வதுடன் சரி! அவற்றையும்கூட மருத்துவக் குழுவினரின் செயல்பாடுகளை பாராட்டும் வகையிலேயே அமைத்துக் கொள்கிறார்.

இன்னொரு திடீர் மாற்றமாக கடந்த 28-ம் தேதி முதல் சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், பேரிடர் மேலாண்மை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் பேட்டியளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றோ (மார்ச் 30) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் முடிந்து, பேட்டியளிக்கும் பொறுப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமியே ஏற்றுக் கொண்டார்.

ஏற்கனவே திருச்சியில் சுஜித் என்கிற சிறுவன் போர்வெல்லில் விழுந்த நிகழ்வில், அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பவ இடத்திற்கு சென்று உணர்வுபூர்வமாக இயங்கினார். எனினும் அங்கு அவர் தரையில் அமர்ந்து சாப்பிட்டது உள்ளிட்ட நிகழ்வுகளும், அது தொடர்பாக வெளியான போட்டோக்களும் அவரது புரமோஷன் வேலையாக விமர்சிக்கப்பட்டது. அதேபோல இப்போதும் கொரோனாவை பயன்படுத்தி, அமைச்சர் தன்னை புரமோட் செய்வதில் குறியாக இருப்பதாக சீனியர் அமைச்சர்கள் சிலர் மத்தியிலேயே புகைச்சல்கள் கிளம்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தொலைபேசியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு பேசினார். அப்போது பிரதமர் மோடி, தமிழக சுகாதாரத் துறை இன்னும் முழுமையாக களப்பணியில் இறங்கவில்லை என சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகே மீடியா சந்திப்புகளை தவிர்த்துவிட்டு, சுகாதாரத்துறை பணிகளை முடுக்கி விடும்படி முதல்வரிடம் இருந்து விஜயபாஸ்கருக்கு உத்தரவு வந்ததாக சொல்கிறார்கள். தவிர, சுகாதாரத்துறை சார்பில் நேரடியாக மக்களை சந்தித்து, உடல்நிலையை கண்காணிக்கும் ஒரு முயற்சியையும் அதன்பிறகு எடுத்தார்கள். அதாவது, எங்கெங்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதோ, அதைச் சுற்றி 5 கிமீ தொலைவில் அத்தனை பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் அணுகி, கண்காணிக்கும் ஒரு திட்டத்தை இப்போது செயல்படுத்தி வருகிறார்கள்.

இதன்படி கடந்த இரு நாட்களில் 11 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் பேரின் உடல்நிலை குறித்த தகவல்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்திருக்கிறார்கள். மொத்தம் 10000 சுகாதாரப் பணியாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்மூலமாக கொரோனா பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பிலோ, ‘பேட்டியளிக்க அமைச்சருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறுவது சரியல்ல. எப்போதும் போல அவசியம் ஏற்பட்டால் அமைச்சர், செய்தியாளர்களை சந்திப்பார். அதிகாரிகளும் பேசுவார்கள்’ என்கிறார்கள்.

இதற்கிடையே இன்னொரு தரப்பினரோ, அமைச்சரின் பேட்டிகள் எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர, மொத்தமாக தடை செய்யப்படவில்லை என்கிறார்கள். 29-ம் தேதி அமைச்சர் ஒரு பேட்டி அளித்ததையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அமைச்சர் பேட்டி முக்கியமில்லைதான். மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment