தமிழகத்தில் 10 நாட்களில் டெங்கு காய்ச்சல் பரவுதல் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர செய்தியாளர்களிடம் கூறும்போது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பராவமல் இருப்பதற்காக தமிழக அரசு பல்வேறு வகையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தற்போது டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்கும் வகையில், மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்களுக்கு வழங்குவதற்கு போதுமான மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. தமிழகத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்ற வகையில் அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை மூலம், தமிழகம் முழுவதும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளோரை, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பு தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சல் பரவுவது 100 சதவீதம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 10 பேரும், இதர காய்ச்சலால் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், காய்ச்சல் பரவுதலை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.