நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கைவில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசலில் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடமானது அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நான் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட எந்த அரசு பதவியிலும் இல்லாத போது 2007-ம் ஆண்டு தொழில் துவங்குவதற்காக வாங்கப்பட்ட நிலமாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பிரதானமான தொழில் கல்குவாரி. இது சாதாரணமாக சாலை போடுவதற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான ஜல்லிக்கல் உற்பத்தி செய்யும் கிரஷர் தொழிலாகும். இந்தத் தொழில் 2007-ம் ஆண்டு என் பெயரில் துவங்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு உட்பட்டு கனிம வள, சுற்றுச் சூழல், மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறைகளின் முறையான அனுமதி பெறப்பட்டு இயங்கி வருகிறது.
இதைப்போலவே 120 புளூ மெட்டல் நிறுவனங்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இயங்கி வருகின்றன. இதில் எங்கள் குடும்பத்தின் நிறுவனமும் ஒன்று. இதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு முறையான விற்பனை வரி, வருமான வரி உள்ளிட்டவைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
நான் அமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் இந்த குடும்ப நிறுவனங்கள் என் பெயரில் இயங்கக் கூடாது என்பதற்காக வங்கி வரவு, செலவு உள்ளிட்ட முழு நிர்வாகப் பொறுப்பையும் எனது தந்தை பெயருக்கு பொது அதிகாரம் கொடுத்துள்ளேன். எனது தந்தைதான் இவற்றை நிர்வகித்து வருகிறார்.
பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும், சமையல்காரர் சுப்பையா என்று கூறுவது வேதனைக்குரியது. சுப்பையா ஒரு தொழில் முனைவர், வருமான வரி கட்டுபவர், எங்கள் நிறுவனத்தில் சப் கான்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். மேலும், சுப்பையா என்ற பெயரில் எனக்கு சமையல்காரரோ, உதவியாளரோ இல்லை என்பதையும், வேறு எந்த மாற்று நபரின் (பினாமி) பெயரிலும் எங்கள் குடும்பத்தினர் தொழில் நடத்தவில்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.
ஏப்ரல் 7-ம் தேதி எனக்கும் என்னைச் சார்ந்தவர்களுக்கும் வருமான வரிச் சோதனை நடந்தது. தொடர்ந்து 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. 3 முறையும் நான் சட்டத்திற்கு உட்பட்ட குடிமகன் என்ற முறையில் காலதாமதம் இன்றி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு சென்று முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளேன். அதில் நான் சட்ட ரீதியாக எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன்.
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி அறிக்கை விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் செயல் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது. இளம் வயதிலேயே ஜெயலலிதாவின் ஆசியுடன் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2 முறை அமைச்சராகவும் பொறுப்பேற்று வேகமாகவும், துடிப்பாகவும், எந்த செயலையும் முன்னின்று நான் செய்து வருவதால், எதிர்க்கட்சித் தலைவர் இது போன்ற சேற்றை வாரி இறைப்பதை தன் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்.
இந்த விமர்சனங்களை தாண்டி நான் நிரபராதி என்பதை காலம் நிரூபிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த மனப்பக்குவத்தையும், சகிப்புத்தன்மையும், எதையும் தாங்கும் மன தைரியத்தையும் ஜெயலலிதா அதிகமாகவே எனக்குள் விதைத்துள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக என் தந்தை இரா. சின்னத்தம்பி பல்வேறு தொழில்களை முறையாக செய்து தன் உழைப்பால் உயர்ந்தவர் ஆவார். எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக பதவி வகித்தும், இன்று வரை பொது வாழ்க்கையில் எளிமை, தூய்மை என நற்பெயரோடு வாழ்ந்து வருகிறார் என்பதை எங்கள் மாவட்ட மக்கள் நன்கு அறிவர்.
எனவே தொடர்ந்து ஊழல் புகார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. குட்கா பிரச்சனையில் சொல்லப்படும் மாதவராவ் என்பவர் யார் என்பது எனக்கு தெரியாது என்பதையும், இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்பதையும், அரசியல் காழ்ப்புணர்சியால் புனையப்பட்ட குற்றச்சாட்டு என்பதையும் இதை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்பதையும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஜெயலலிதாவின் நல்லாசியுடன் நல்ல முறையில் செயல்பட்டு வரும் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்காகவும் எனக்கு நெருக்கடி கொடுத்து என்னை அரசியலில் இருந்து அழித்து விடலாம் என்ற எண்ணத்தோடும் இது போன்ற சேற்றை வாரி இறைக்கும் செயலை செய்து வருகிறார் ஸ்டாலின். அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். கூவிக்கூவி அரசியல் களத்தில் அவர் அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகள் விலை போக மாட்டா.
ஆதாரமற்ற குற்றாச்சாட்டுகளை அள்ளி வீசும் இவரும், இவரது குடும்பமும்தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பதை நாடறியும். கடந்த காலத்தில் கலைஞர் தொலைக்காட்சியின் ரூ.200 கோடி பணப்பரிவர்த்தனை, இந்தியாவின் மிகப்பெரிய ஆதாரமிக்க 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குகள், முறைகேடான பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு கேபிள் இணைப்புகள், பெரம்பலூர் சாதிக் பாட்சா மரணம், அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை, மதுரையிலே பத்திரிக்கை எரிப்பின் காரணமாக 3 பேர் மரணம் என்பதை எல்லாம் மக்கள் ஒருபோதும் மறக்கவில்லை என்பதை ஸ்டாலின் ஒருபோதும் மறந்து விட்டு பேச வேண்டாம்.
இந்திய வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலான 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்ட குடும்பம் மு.க. குடும்பம். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே நீதிபதி சர்க்காரியா அவர்களால் இடித்துரைக்கப்பட்ட கட்சியானது திமுக.
அந்த ஊழல் தகிடுதத்தங்களின் உறைவிடமான திமுக என்ற கட்சியின் செயல் தலைவர்தான் தாங்கள் என்பதை மறந்துவிட்டுப் பேச வேண்டாம். என்னைப் பொறுத்தவரையில் நான் எல்லாவற்றையும் பொறுமையாக அணுகி என்மீது எந்த தவறும் இல்லை என்பதை சட்ட ரீதியாக உறுதியாக மெய்ப்பிப்பேன்.
மக்களுக்காக முழு நேரமும் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசின், திட்டங்களையும், இந்திய அளவில் முதன்மையான நம் மக்கள் நல்வாழ்வுத் துறையின் நற்பணிகளையும், வேகத்தையும் முடக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் ஸ்டாலின். இவரின் திசை திருப்பும் முயற்சி ஒருபோதும் நடக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டாலின் பல ஆண்டுகள் வயதில் மூத்தவர். நான் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர் இல்லை என்றே நான் நம்புகின்றேன். இருப்பினும் அவர்களுக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். "காலம் தனது கணக்கை சரியாக முடிக்கும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.