டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் கோயபல்ஸ் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் என்ற திமுக-வின் தீர்மானம் குறித்து?
டிடிவி தினகரன் ஆதரவான 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ஜனநாயகப் படுகொலை என்று கூறுவதற்கு திமுக-விற்கு எந்த தகுதியும் இல்லை. ஜனநாயப் படுகொலைக்கு சொந்தக்காரர்கள் யார் என்று கேட்டால், அது திமுக-வினர் தான்.
சட்டமன்றத்தில் எங்களை, எங்கள் தலைவர்களை தாக்கிப் பேசுவது, எங்களை பேச விடாமல் வெளியேற்றுவது என ஜனநாயகப்படுகொலை செய்ததே திமுக தான். சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஜெயலலிதாவை தாக்கியிருக்கவும் செய்கின்றனர்.
சபாநாயகராக இருந்த மதியழகனை இழுத்து கீழே தள்ளிவிட்ட சம்பவங்களும், விருதுநகர் சீனிவாசனை சபாநாயகராக அமரவைத்து சட்டமன்றத்தை நடத்தியவர்கள் ஜனநாயக படுகொலை என்று கூறுவது கேலியாக உள்ளது.
தற்பேதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை வெறுப்பதாக மு.க ஸ்டாலினும், டிடிவி தினகரனும் கூறிவருகிறார்களே?
டிடிவி தினகரனும், மு.க ஸ்டாலினும் இந்த ஆட்சி மக்களால் வெறுக்கப்படுகிறது என்று தொடர்ந்து கோயபல்ஸ் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பொய்யை திரும்ப திரும்ப சொல்லவதனால் அது உண்மையாகிவிடாது. இது ஜெயலலிதா உருவாக்கிய மக்கள் ஆட்சியாகும்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும்?
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது என்பதால், அது குறித்து கருத்து கூறுவது என்பது சரியாக இருக்காது.
அதிமுக மூழ்கி வரும் கப்பல் என்று ப.சிதம்பரம் கூறியது குறித்து?
அவரது காங்கிரஸ் கட்சி மூழ்கிபோன கப்பல், கிட்டத்தட்ட மூழ்கியே போய்விட்டது போல தான் தெரிகிறது. அதனை முதலில் காப்பாற்றட்டும் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.