ஆட்சியை கலைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான சூழ்ச்சிகளை செய்கின்றவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதவது: சிறு, குறு தொழில் நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் ஏறக்குறைய 57 வகையானன கோரிக்கைகளை அளித்தனர். இவை ஏற்கெனவே தொகுக்கப்பட்டு, ஜி.எஸ்.டி-யில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டது என்றாலும், வரி விகிதம் என்பது இறுதி செய்யப்பட்டது கிடையாது. அதன்படி பார்க்கும் போது, துணிகள் மீதான வரிவிகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் அளிக்கும் கோரிக்கைகள், ஜி.எஸ்.டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு, அந்த கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அது குறித்து தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.எஸ்.டி-யை காரணம் காட்டி தவறான வழியில் கொள்ளை லாபம் அடிப்பார்களேயானால், அது சட்டத்திற்கு விரோதமாக எடுத்துக் கொள்ளப்படும். மேலும், ஜி.எஸ்.டி இல்லாத பொருட்களுக்கு கூட, போலியான ஜி.எஸ்.டி வரி வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது
தற்போதைய நிலையில் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது நிலுவையில் உள்ளது.பொதுச்செயலாளர் இல்லை என்று எடுத்துக்கொண்டால், துணைப்பொதுச்செயலாளர் என்பது கேள்விக்குறிதான். அப்படி இருக்கும் போது துணைப்பொதுச்செயலாளரே இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். எனவே, துணைப்பொதுச்செயலாளர் என்பவர் நியமித்தது செல்லாத ஒன்றாகவே இருக்கும்.
எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில், ஏ-வாக இருந்தாலும் சரி பி-யாக இருந்தாலும் சரி. ஏ-யாரென்று புரிந்து கொள்வீற்கள் பி-யாரென்று புரிந்து கொள்வீர்கள். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான சூழ்ச்சிகளை செய்தால், ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கின்ற துரோகிகளை இந்த நாடே மன்னிக்காது என்று கூறினார்.