நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 10) நடந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில், தினகரனின் நியமனம் அதிமுக சட்டவிதிகளுக்கு விரோதமானது. தினகரன் அதிமுக பொறுப்பாளர்களை தன்னிச்சையாக நியமித்துள்ளார். கட்சி தொடர்பாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு உரிமை இல்லை. இதுவரை கட்சியில் அவர் எடுத்த முடிவுகள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் செல்லாத ஒன்று. தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. தினகரனால் தரப்பட்ட பதவிகளை அதிமுக-வினர் நிராகரிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி அணியினரின் இந்த அதிரடி முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். இது தொடர்பாக தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அதிமுக கட்சிப் பெயரை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிமுக கட்சிப் பெயரை பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை விட்டுள்ளனர் இது சட்ட விரோதமானது.
என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமித்ததை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் இப்போது என்னை நீக்குவதாக சொல்கின்றனர். தேர்தல் ஆணையத்தில் ஒன்று, வெளியே ஒன்று என முரண்பாடாக பேசி வருகின்றனர். இது போன்று பேசி ஏமாற்று வேலைகளை செய்யும் 420-களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என கடுமையாக சாடினார்.
டெல்லியில் இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "420 என கூறியது தினகரனுக்கு தான் பொருந்தும். கடந்த மூன்று மாத நிகழ்வுகளை பார்க்கும் போது இது நன்றாக புரியும்" என்றார்.
இந்நிலையில், இன்று யானைகள் தினத்தை முன்னிட்டு, கோவையில் வனத்துறை சார்ந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சீனிவாசன், "எல்லாம் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். இது வெறும் அண்ணன் தம்பி சண்டை தான். எல்லாம் சரியாகிவிடும். நல்ல சூழ்நிலை உருவாகி, ஆட்சி தொடர்ந்து நான்கு வருடமும் நடைபெறும். திவாகரன் தவறாக பேசாமல், நாணயமாக பதில் சொன்னால் நன்றாக இருக்கும். ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்ச்சியில் பேசுவது சரியல்ல. தினகரன் கூறிய '420' என்ற வார்த்தை வாய்தவறி வந்திருக்கலாம். இதை 'டேக் இட் ஈஸி'யாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரனை 420 என்று சொன்னதே எனக்கு தெரியாது. முதல்வர் சொல்லியிருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். யாரும் யாரைப்பற்றி தரக்குறைவாகப் பேசினாலும் அது தவறுதான் " என்று தெரிவித்தார்.
தினகரன் '420' என்று கூறியதற்கு, 'அவர் தான் 420 ' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதில் அளித்திருந்த நிலையில், 'வாய் தவறி தினகரன் அப்படி சொல்லிவிட்டார்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமாளிக்கும் வகையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.