முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி எந்தவித தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டது என்பது கட்சியின் சட்ட விதிகளுக்கு விரோதமானது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தில் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது நியமிக்கப்பட்ட தலைமை நிலைய செயலாளர் முதல்வர் கே.பழனிசாமி, அமைப்பு செயலாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மருத்துவ அணி செயலாளர் பி.வேணுகோபால், மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனி வாசன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றாலும் அவர்கள் சசிகலாவால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால் கையெழுத்திடவில்லை.
சசிகலாவால் நியமனம் செய்யப்பட்ட தினகரன் நியமனம் செல்லாது என தீர்மானம் போடப்பட்டுள்ள நிலையில், அவைத் தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் திண்டுக்கல் சீனி வாசனின் பதவிகளும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடுஅரசு மருத்துவமனையில் இன்று காலை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஈரோட்டில் சிறப்பாக நடைபெறும். அதனையயொட்டி, ஈரோட்டில் மாணவ- மாணவிகள் பங்கேற்கும் மராத்தான் போட்டியை தொடங்கி வைத்துள்ளோம்.
ஜெயலலிதாவின் நல்லாசியுடன் தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி எந்தவித தொய்வின்றி தொடர்ந்து நடைபெறும் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அது தொடர்பான கேள்விகளுக்கு செங்கோட்டையன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும், டிடிவி தினகரனுக்கு எதிரான தீர்மானத்தில் கையெழுத்திடாது ஏன் என்ற கேள்விக்கும், அவர் எந்தவித பதில் கூறாமல் சிரித்தபடியே நகர்ந்துவிட்டார்.