நடிகர் கமல்ஹாசன் தேவையில்லாமல் சிங்கத்துடன் மோதுகிறார் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகவே, நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். ஆனால், அதற்கு பதிலளிக்க வேண்டிய ஆட்சியாளர்ளோ, கமலை திருப்பி விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
முன்னதாக கமல் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்திருப்பதாக கூறியிருந்தபோது, அமைச்சர்கள் அனைவரும் கமல்ஹாசன் குறித்து கடுமையைக விமர்சனம் செய்திருந்தது என்பது நினைவில் இருக்கலாம்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கமல்ஹாசன், ஊழல் புகார்களை அமைச்சர்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அடுத்த சில நாட்களில், அரசு இணையதளங்களில் இருந்த அமைச்சர்களின் விவரங்கள் காணாமல் போயின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டரில், "ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால், மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் பல குற்றங்கள் நடந்தும் எந்த கட்சிகளும் முதலமைச்சரை ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
If one state's CM should resign for a mishap & corruption under his govt. How come no party calls for resignation in TN. Enough crimes done
— Kamal Haasan (@ikamalhaasan) 15 August 2017
இதற்கு அடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "எனது இலக்கு என்பது சிறப்பான தமிழகம். எனது குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது? திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.
My aim is a better Tamilnadu.Who dares to strengthen my voice? DMK AIADMK & parties R tools to help. If those tools R blunt find others.
— Kamal Haasan (@ikamalhaasan) 15 August 2017
இதைத் தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ள மூன்றாவது ட்வீட்டில், "சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் லெல்வோம்
— Kamal Haasan (@ikamalhaasan) 15 August 2017
இதுவரை தமிழக அரசை விமர்சித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது முதலமைச்சரை நேரடியாக விமர்சித்து இருப்பது, தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 'என் குரலுக்கு வலிமை சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது?' என அவர் கேட்டிருப்பது அவரது அரசியல் படிகளில் அடுத்த முன்னேற்ற அடியாகவே தெரிகிறது. மேலும், இதுநாள் வரை கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் "திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எனக்கு கருவியாக உதவ வேண்டும். இந்தக் கருவிகள் பயன்படவில்லை எனில், வேறு ஒன்றை கண்டறிய வேண்டியது தான்" என கூறி, இரு கட்சிகளுக்கும் தனது எதிர்ப்பு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலளிக்கும்போது: நடிகர் கமஹாசன் தேவையில்லாமல் சிங்கத்துடன் போதுவது போல தெரிகிறது. அவரது விஸ்வரூபம் படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் அதிமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். கமல்ஹாசனுக்கு அதிமுக-வை குறை சொல்வதற்கு எந்தவித தகுதியும் கிடையாது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் இந்த ஆட்சியில் அவர் எந்த குறைகளை கண்டார் என்று கேள்வி எழுப்பினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.