விஜய்க்கு எதிர்ப்பு… அஜித்துக்கு ஆதரவு! – தமிழக அரசின் ‘விஸ்வாச’ அரசியல்

ஜெயலலிதா இருந்தது முதல் இறந்த பிறகும் கூட அதிமுக – அஜித்தின் உறவு இன்றளவும் பிணைப்பாகவே இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்

விஜய்க்கு எதிர்ப்பு... அஜித்துக்கு ஆதரவு! - தமிழக அரசின் 'விஸ்வாச' அரசியல்
விஜய்க்கு எதிர்ப்பு… அஜித்துக்கு ஆதரவு! – தமிழக அரசின் 'விஸ்வாச' அரசியல்

‘சர்கார்’ படத்தையும் சரி, படம் திரையிடப்பட்ட தியேட்டர்களையும் சரி, ரசிகர்களையும் சரி… ஒரு வழி செய்துவிட்டது ஆளும் அதிமுக அரசு. படத்தின் காட்சிகள் சிலவற்றை நீக்கினால் தான் அடுத்த ஷோவே ஓடும் என்ற நிலை இருந்தது.

பல தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருந்த போதே உள்ளே புகுந்த அதிமுகவினர், ரசிகர்களை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினர். ஏற்கனவே,  400, 500, 800, 1000 என்று விலை கொடுத்து, நொந்து நூலாகி படம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இது மேலுமொரு வேதனையாக அமைந்தது.

அது எப்படி நாங்க கொடுத்த இலவச பொருட்களை மட்டும் தீயில் போடலாம்? திமுக கொடுத்த இலவச டிவியை ஏன் முருகதாஸ் தீயில் போடவில்லை? என்ற சில்லி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தனர் தமிழக அமைச்சர்கள். அப்படியெனில், இலவசம் கொடுப்பதை முருகதாஸ் எதிர்த்தது பிடிக்கவில்லையா? அல்லது திமுக கொடுத்த இலவசத்தை எரிக்காதது தான் பிரச்சனையா? என்று விமர்சனம் எழுந்தது.

சர்கார், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதே இந்த நெடிக்கு முக்கிய காரணம் என்றால், அது மிகையாகாது. அமைச்சர்களின் கோபத்தில் ஓரளவிற்கு நியாயம் உள்ளது என்பதற்கு சன் பிக்சர்ஸும் ஒரு காரணம் தான். ‘திமுக சப்போட்டர்களான சன் நெட்வொர்க் எங்களை விமர்சித்து எடுப்பார்கள்… அது விஜய் படம் என்பதற்காக நாங்கள் அமைதியாக போக வேண்டுமா?’ என்பதை ஆளும் அதிமுக அரசின் முதல் கேள்வி.

‘வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு நேரடியாக எச்சரிக்க, ‘விஜய் மீது வழக்கு போடுவோம்’ என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவிக்க, ‘விஜய் சினிமாவில் பேசாமல், வீதியில் இறங்கி பேசினால் நான் அவருக்கு அடிமையாக இருக்க தயார்’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சீண்டிவிட, ‘முதலமைச்சர் ஜெயலலிதா இல்லாமல் இவர்களுக்கெல்லாம் குளிர்விட்டுப் போய்விட்டது’ என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்க, ஒட்டுமொத்த அம்புகளும் விஜய்யை கார்னர் செய்தன.

ஜெயலலிதா மீதான விஸ்வாசத்தை மக்களுக்கு காட்ட, சர்கார் ஒரு அருமையான வாய்ப்பு என்று நினைத்த பழனிசாமி தலைமையிலான அதிமுக சர்கார், தானாக வந்து சிக்கிய பலியாடாகவே விஜய்யை பாவித்தது.

‘அம்மா திட்டங்களை யார் எதிர்த்தாலும் சும்மா விடமாட்டோம்’ என்ற ஸ்லோகனை ஒவ்வொரு பேட்டியிலும் பரப்பிய அமைச்சர்கள், மக்கள் மத்தியில் ‘அட… இறந்தும் ஜெயலலிதாவுக்கு இவ்ளோ மரியாதை கொடுக்குறாங்களே’ என்று ஓரளவிற்கு எண்ண வைத்தனர். இதன் மூலம், டிடிவி தினகரனுக்கு ஒரு பின்னடைவையும், அரசை நடிகர்கள் விமர்சித்தால், என்ன நடக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தும் நிகழ்வாகவும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க நினைத்தது அரசு. ரஜினிக்கும் இதன் மூலம் மறைமுக எச்சரிக்கை விடுக்க முடிவு செய்தது.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவினரின் போராட்டங்கள் தீவிரமடைய, சர்ச்சைக்குரியதாக கூறப்படும் சில காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக் கொண்டதும், நேற்று மதியம் முதல் நீக்கப்பட்ட காட்சிகளுடன் ‘புதிய சர்கார்’ ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தான், இதே தீபாவளிக்கு ஆர்.கே.சுரேஷ் நடித்த ‘பில்லா பாண்டி’ படமும் ரிலீசானது. ‘சர்கார்’ கலவரத்தால், பெரிதும் கண்டு கொள்ளப்படாத இப்படத்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. நிகழ்கால தமிழ் சினிமாவில் விஜய்யின் ஒரே போட்டியாளர் அஜித். அவரது புகழ்பாடும் படமே பில்லா பாண்டி. இதில், நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், அஜித்தின் தீவிர ரசிகராக, அஜித் ரசிகர் மன்ற தலைவராக ஒவ்வொரு காட்சியிலும் உருகி உருகி தல புராணம் பாடியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்த்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்த கருத்துகள் தான் மேட்டரே. அவர் கூறுகையில், “பில்லா பாண்டி படத்தைப் பார்த்தேன். யதார்த்தமான நடிப்பால் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். சிறந்த கதையம்சம் உள்ள படமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நிறைந்த ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி இருக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சினிமா ஆர்வலர்களே பெரிதும் ஆர்வம் காட்டாத இப்படத்திற்கு தாமாக வந்து விளம்பரம் கொடுத்திருக்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர், இப்படத்தையும் பார்த்தார் என்று வைத்துக் கொள்வோமே!.. ஆனால், தாமாக வந்து அவர் பாஸிட்டிவ் விமர்சனம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அஜித்தை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் ‘பில்லா பாண்டி’ நல்ல படம் என்று சொல்லியிருப்பதன் மூலம், விஜய்க்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை அதிமுக அழுத்தமாக பதிவு செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவின் அபிமானியாகவே கருதப்பட்டவர் நடிகர் அஜித். குறிப்பாக, ஜெயலலிதாவின் ஜெண்டில்மேன்’ஸ் லிஸ்ட்டில் அஜித்துக்கு எப்போதும் இடமுண்டு என்று கூறப்படுவதுண்டு. 2011 தேர்தலின் போது, அதிமுகவுக்கு தான் வாக்களித்தேன் என்று வெளிப்படையாக கூறியவர் அஜித். ஜெயலலிதா இறந்த போது கூட, அஜித் தான் அதிமுகவின் அடுத்த தலைவர் என்று, மலையாளத்தின் முன்னணி ஊடகம் முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. ஜெயலலிதா இருந்தது முதல் இறந்த பிறகும் கூட அதிமுக – அஜித்தின் உறவு இன்றளவும் பிணைப்பாகவே இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தான், சர்கார் ரிலீஸாகி, அரசை விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்த, விஜய்க்கு கடும் நெருக்கடி கொடுத்து, காட்சிகளை நீக்க வைத்திருக்கிறது அதிமுக. அதே, அதிமுக தான் ‘பில்லா பாண்டி’ சிறப்பான திரைப்படம் என்று தாமாக வந்து சர்டிஃபிகேட்டும் கொடுத்துள்ளது.

ஏற்கனவே தலைவா பட பிரச்சனையின் போது, ஜெயலலிதாவால் கொடநாடு எஸ்டேட்டின் கேட்டிலேயே நிறுத்தப்பட்ட விஜய், பல மணி நேர காத்திருப்புக்கு பின் திரும்பி அனுப்பப்பட்டார். ‘காவலன்’ படத்திற்கு திமுக தரப்பு கொடுத்த வலியை விட, ஜெயலலிதாவின் செயல்பாடு விஜய்யை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது ஆறாத வடுவாக விஜய்யிடம் இன்னமும் இருப்பதாலேயே, சர்காரில் வரலக்ஷ்மியின் கேரக்டருக்கு ‘கோமளவள்ளி’ என்று பெயர் வைக்க விஜய் தரப்பு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அஜித் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்பது 99% உறுதி. அப்படி அவர் பெரும் படையுடன் களத்திற்கு வரும் பட்சத்தில், அஜித் தான் அதிமுகவின் கேடயம் என்று கூறப்படுகிறது. எனவே, ‘பில்லா பாண்டி’ வாழ்த்து மூலம் அரசியல் என்று வந்தால் விஜய்க்கு எதிர்ப்பு, அஜித்துக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டையே அதிமுக அரசு எடுத்திருப்பதாவே கூறுகின்றனர் அரசியல் வல்லுனர்கள்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister kadambur raju praised billa pandi movie

Next Story
உலக அழகியுடன் ஆடிய ஆணழகன், இன்று தெலுங்கு படத்தில் சைட் ரோலில்.. ரசிகர்கள் அதிர்ச்சி!நடிகர் பிரசாந்த்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com