Is Possible Cinema Tickets are for sale only Online: தமிழகத்தில் இனி அனைத்து திரையரங்குகளிலும் சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்ற திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்பதற்கு வரவேற்றும் விமர்சித்து விவாதங்கள் உருவாகியுள்ளது.
அமைச்சர் கடம்பூர் ராஜு, கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற முறை விரைவில் அமலுக்கு வரும்” என்று பேசினார். இது சினிமா வட்டாரங்களில் விவாதமாகியுள்ளது.
முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் பிளாக் டிக்கெட்டுகள் ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.2 கோடி வசூல் என்று பாக்ஸ் ஆஃபீஸ் முடிவுகள் வெளியிடப்படுகிறது. இவையெல்லாம் உண்மையா, பொய்யா என்று தெரியாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் நாயகனின் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் கூடுதல் விலை கொடுத்து பிளாக் டிக்கெட் வாங்கியாவது பார்க்கின்றனர். இதனால், பொதுவான சினிமா ரசிகர்கள் பணத்தை இழப்பதோடு இந்த நடைமுறைகள் மீது அதிருப்தி அடைகின்றனர்.
இந்நிலையில்தான் அமைச்சரின் இந்த பேச்சு, சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமாத்துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், “இது ஒரு நல்ல திட்டம். அமைச்சர் கூறியதை வரவேற்கிறேன். இதை எல்லோருடனும் கலந்து பேசி செய்ய வேண்டும். ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் என்பது பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். தியேட்டர்களில் எத்தனை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. தியேட்டரில் நிஜமாகவே எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது தெரியக்கூடிய சாஃப்ட்வேர் எல்லாம் வந்துவிட்டது. ஒரு படம் வெளியானது மூன்று நாளில் 100 கோடி ரூபாய் வசூல், 200 கோடி ரூபாய் வசூல் என்று கூறுகிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது நமக்கு தெரிந்துவிடும். அதோடு 30 ரூபாய் டிக்கெட்டை 300 ரூபாய்க்கு விற்பது, 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்பது என்ற வாய்ப்பு மிக குறைவாக இருக்கும். அரசின் இந்த திட்டத்தை தயாரிப்பாளர்கள், தியேட்டர் முதலாளிகள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் கலந்து பேசி செய்ய வேண்டிய விஷயம் இது. இதனை அரசே செய்யும்போது, சில ஆப்களில் கூடுதலாக 30 ரூபாய் வாங்குகின்றனர். அது குறைக்கப்படலாம்.
அமைச்சர் நல்ல நோக்கத்துடன் கூறியுள்ளார். சில மால் தியேட்டர்களில் அதிகபட்ச விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறிய தியேட்டர்களும் இருக்கின்றன. அதனால், இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். சினிமா ரசிகர்கள் தியேட்டருக்கு நேரில் சென்று டிக்கெட் வாங்குவதாக இருந்தாலும், அது ஆன்லைனில் விற்பனை செய்யும்படி இருக்க வேண்டும். ” என்று கூறினார்.
இது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான வாகை சந்திரசேகர் கூறுகையில், “தற்போது ஆன்லைன் டிக்கெட்டில் சினிமா ரசிகர்கள் கூடுதலாக கட்டணம் செலுத்துகின்றனர். அரசு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும்போது எந்தளவுக்கு விலை குறையும் என்பது கேள்விக்குறி. அது மட்டுமில்லாமல், சினிமாவுக்கு போக வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் திடீரென திட்டமிடலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு திட்டமிட்டு போகமுடியாமல் போகலாம். அப்போது ஆன்லைனில் வாங்கிய டிக்கெட் என்பது ரத்து செய்யும்போது சிக்கலாகிறது. அதனால், முழுவதும் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. அதையெல்லாம் தாண்டி இந்த திட்டம் நடைமுறையில் வசதியாக இருந்தால் மக்கள் வரவேற்பார்கள். இல்லாவிட்டால், பழைமுறைப்படியே தொடர்வார்கள். அதிக விலை கொடுத்து பிளாக் டிக்கெட் படம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் அந்த நடிகரின் ரசிகர்கள்தான். அதனால், பிளாக் டிக்கெட் விற்பனையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு, ஆன்லைன் டிக்கெட் விற்பனை மட்டுமே தீர்வாக இருக்காது.” என்று கூறினார்.