Advertisment

அ.தி.மு.க.,வை சேரவிடாமல் தடுத்து எதிர்கட்சியாக வர பா.ஜ.க முயற்சி - அமைச்சர் கே.என்.நேரு

வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன். தமிழக அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்; அ.தி.மு.க இடத்தை பிடிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது – அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

author-image
WebDesk
New Update
latest tamil news, tamil news, Trichy news, latest trichy news, KN Nehru, கேஎன் நேரு, திருச்சி செய்திகள், திமுக, திருச்சி, தமிழ் செய்திகள், KN Nehru speech, Minister KN Nehru, DMK, Tiruchi news

பிளவுப்பட்டு கிடக்கும் அ.தி.மு.க.,வை சேரவிடாமல் தடுத்து எதிர்கட்சியாக வர பா.ஜ.க முயற்சிக்கிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படியுங்கள்: ஆர்.என். ரவி இன்னொரு அண்ணாமலை: தி.மு.க கடும் விமர்சனம்

இக்கூட்டத்தில் தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்புரையாற்றியதாவது;

இந்த கூட்டம் கூட்டபட்டதின் நோக்கம், வரும் 4-ம் தேதி நம் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். திருச்சியில் காகித தொழிற்சாலையின் 2- வது அலகினை தொடங்கி வைக்கிறார்.

publive-image

அதனைத்தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அதன் பிறகு சென்னை செல்கிறார். இது குறித்த முழு விவரங்களை தெரிவிக்க தான் இந்த கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சியினர் போல்  செயல்பட்டு வருகிறார். பா.ஜ.க.,வோ தமிழக அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பா.ஜ.க.,வினர் சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கிக் காட்டுகின்றனர்.

தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் – தம்பி மாதிரி. கடந்த காலங்களில் அ.தி.மு.க.,வுடனான போட்டி என்பது அண்ணன் – தம்பி போட்டியாக இருந்தது. ஆனால் இப்போது சகல அதிகாரங்களையும் வைத்திருப்பவர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது.

அ.தி.மு.க இரண்டாக உடைந்து இருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் பா.ஜ.க, அ.தி.மு.க.,வை ஒன்று சேர விடாமல் மேலும் பிளவு படுத்தி தமிழகத்தில் அ.தி.மு.க.,வின் இடத்தை பிடிக்க பா.ஜ.க  முயன்றுக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க ஒன்றிணையாமல் இருந்தால் தான் பா.ஜ.க.,வால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்பதால், இணைவதை தடுத்து முட்டுக்கட்டை போடுகிறது. தேர்தலில் தேவையான இடங்களை பெறும் வகையில் அ.தி.மு.க.,வை பிரித்து வைத்துள்ளனர்.

நான் வெளிப்படையாக சொல்கிறேன், வெட்கத்தை விட்டு சொல்கிறேன், இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.

எனவே இப்போது நாம் எப்படி பலமாக இருக்கின்றோமோ அப்படியே  கூடுதல் பலமோடு செயல்பட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களையும் நாம் பிடிக்க வேண்டும். திருச்சியில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் அனைத்து இடங்களிலுமே நாம் வெற்றி பெற்றதை தீர்மானிக்கும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும். கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சங்கடங்கள் வருகிறது. அவற்றை சரி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும் என பேசினார்.

இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பரணிகுமார், அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பகுதி செயலாளர்கள் காஜா மலை விஜி, முத்து செல்வம் மற்றும் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தி.மு.க கழகத்தின் முதன்மைச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

வருகின்ற 4-ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு காகித ஆலை இரண்டாவது யூனிட் துவக்கி வைக்க திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தி.மு.க கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிடும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கமிட்டி அமைத்து தேர்தல் பணியினை விரைவாக தொடங்கிட வேண்டுமென கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இதர பணிகளுக்கு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் மாதம் 12 13 மற்றும் 26 27 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Trichy K N Nehru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment