அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: 15 ஆண்டுகளாக காத்திருக்கும் பயிற்சி முடித்த மாணவர்கள்; உறுதி அளித்த அமைச்சர்

அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக காத்திருந்த அவர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

all caste become priest, minister pk sekar babu, dmk, kalaignar karunanidhi, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கலைஞர் கருணாநிதி, பணி நியமனம், பிகே சேகர் பாபு, priest training completed students association, tamil nadu, tamil news, all caste priest

இதற்கு முந்தைய திமுக ஆட்சியில் 2006ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதையடுத்து, அனைத்து சாதி அர்ச்சக மாணவர் பள்ளிகள் திறக்கப்பட்டு அப்பள்ளிகளில் ஒன்றரை ஆண்டுகள் முறையாக மந்திரங்கள், பூசைகள், ஆகமங்கள், திருமந்திரங்கள் ஓதுவது என அர்ச்சகர் பயிற்சிசியை 207 மாணவர்கள் ஆகமக் கோயில்களில் அர்ச்சகப் பணிக்கு தயாரானார்கள். அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பிராமணர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் என அனைத்து சாதியைச் சேர்ந்த மாணவர்களும் பயிற்சி முடித்துள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படி அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு தகுதியுடையவர்கள் 15 ஆண்டுகளாக பணி நியமனத்துக்கு காத்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பயிற்சி முடித்தவர்களில் 2 பேருக்கு மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டது. அதுவும் ஆகம கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட வில்லை என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் குறை சொல்கிறார்கள். இருப்பினும் இந்த 2 பேர்தான் பிராமணர் அல்லாத சமூகத்தில் இருந்து அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டவர்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பயிற்சி முடித்த மாணவர்களில் 5 பேர் இறந்துவிட்டனர். இன்னும் 200 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருக்கிறார்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் அதிமுக அரசில் கிட்டத்தட்ட கண்டுகொள்ளவில்லை என்று சொல்கிறார் அந்த சங்கத்தின் தலைவர் ரங்கநாதன். திமுக ஆட்சிக்கு வந்தல் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தனர்.

இந்த சூழ்நிலையில்தான், கேரளாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகள் அர்ச்சர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

ஆனால், தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை. திமுக ஆட்சி வந்தால், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் அவர்களுக்கு பணி நியமன அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்தனர். அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாளில் அவரின் வாழ்நாள் விருப்பமான ஆகமக் கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் : அனைத்து சாதி அர்ச்சகர் சங்கம் கோரிக்கை!

“15 ஆண்டுகளாய் நீதிக்காக காத்திருக்கிறோம். கோயில் கருவறையில் இருக்கும் தீண்டாமை ஒழிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இதற்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.” என்று கோரிக்கை வைத்தனர்.

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் கீழ் கண்ட 8 கோரிக்கைகளை முன்வைத்தது.

1.அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ஜூன்,3,2021 அன்று அய்யா கலைஞர் பிறந்த நாளில் அறிவிக்கக் கோருகிறோம்.

2.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரிய கோயில்கள் – பாடல் பெற்ற தளங்களில் அர்ச்சகர் பயிற்சி முடித்து,தகுதி திறமையோடு இருக்கும் 200 மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

3.தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள சைவ , வைணவப் பயிற்சி நிலையங்களை இந்து அறநிலை துறை மீண்டும் தொடங்க வேண்டும்.

4.2020ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தமிழகஅரசு விதிகளில் அர்ச்சகராவதற்கு 35 வயது என்பது உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளாக எங்களுக்கு பணிநியமனம் வழங்கப்படாததினை கணக்கில் கொண்டு இந்த வயதுவரம்பில் தளர்வு வழங்கப்பட வேண்டும்.

5.அர்ச்சகர் பயிற்சி முடித்த 207 மாணவர்கள் அனைவருக்கும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன பணிநியமனம் கிடைக்கவில்லை ஊக்கத்தொகை வழங்குமாறு கோருகிறோம்.

6.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

7.சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமையாக்க சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.

8.அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐந்து பேர் இறந்து விட்டார்கள் அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். ஒரு அரசுப் பணியும் வழங்க வேண்டும்” இந்த கோரிகைகளை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வலியுறுத்தினார்கள். ஆனால், தமிழ்நாடு அரசு ஜூன் 3ம் தேதி அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்த சூழலில்தான், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபுவிடம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களை அரசு எப்போது பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். 15 ஆண்டுகளாக காத்திருந்த அவர்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், 100 நாட்களில் அனைத்து சாதியினர் அர்ச்சகராக்கப்படுவர் என்ற தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பை மனமார வரவேற்கிறோம். தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளான கருவறைத் தீண்டாமையை அகற்றும் விதமாக மதுரை மீனாட்சியம்மன், சிறீரங்கம் ரெங்கநாதர், பழனி, திருச்செந்தூர் முருகன் , சென்னை கபாலீசுவரர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவில்களில் அர்ச்சக மாணவர்கள் நியமனம் அமைய வேண்டும்!” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணி என்பது பிறப்பால் அனைவரும் சமம் என்பதை சட்டப்படி உறுதி செய்வது. 1971 – ல் தந்தை பெரியார் தொடங்கி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வளர்த்த சமூக நீதிக் கோரிக்கை, தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் 2021-ல் முழுமை அடைய வேண்டும்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதிக் காவலர் கலைஞரின் திட்டத்தில் பயின்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு 100 நாட்களில் பணிநியமனம் உறுதி என்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் 100 ஆண்டுகால சமூக நீதிப் பயணத்தில் இவ்வறிவுப்பு ஓர் மைல் கல்லாகும். கடவுளின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வது மட்டுமல்லாது, அரசியல் சட்டத்தின் உயரிய நோக்கமான சமத்துவ சமூகத்தை அடையும் சட்டப்பூர்வ முயற்சி இது. தனக்கு இந்த சாதியைச் சேர்ந்தோர் பூசை செய்தால்தான், தான் மகிழ்வேன் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை.கடவுள் அனைத்து மக்களையும் தன் பிள்ளைகளாகவே பாவிக்கிறார்.மிகவும் குறிப்பாக அர்ச்சகர் பணி என்பது அரசுப்பணி ஆகும்.

அரசுப் பணியில் பொது அறிவிப்பு,தேர்வு,நேர்காணல் என்ற முறையே பின்பற்றப்படுகிறது. பரம்பரை வழி அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன பின்பும் இன்றுவரை மதுரை மீனாட்சியம்மன், பழனி,திருச்செந்தூர் முருகன் கோயில்கள், சிறீரங்கம் அரங்கநாதர்,திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் பரம்பரை, வாரிசுரிமை அடிப்படையில்தான் நடக்கிறது.இது அரசியல் சட்டம்,உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.சபரிமலை வழக்கில் மரபு, பழக்கம் என்ற பெயரில் பெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுப்பது தீண்டாமை என்று கண்டித்தது உச்சநீதிமன்றம்.

தமிழகத்தில் அரசுப் பயிற்சிப் பள்ளியில் ஆகமம் கற்று,தீட்சை பெற்ற இந்து மதத்தின் கவுண்டர்,தேவர், வன்னியர்,முதலியார்,யாதவர்,தேவேந்திரர்,ஆதிதிராவிடர், அருந்ததியர், பிராமணர் உள்ளிட்ட அனைத்து சாதி மாணவர்களை கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. மாணவர்களாகிய நாங்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் திரு.இராஜீ, திரு.வாஞ்சி நாதன் ஆகியோர் உதவியுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீதிகளிலும், நீதிமன்றத்திலும் போராடி வந்தோம்.எதுவும் நடக்கவில்லை.ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள சமூக நீதி அரசு, கொரானா பேரிடர் காலத்திலும் அனைத்து சாதி அர்ச்சகர் நியமன அறிவிப்பு வெளியிட்டிருப்பது சமத்துவத்தின்பால் தமிழக அரசு கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

இந்த மாபெரும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் போக்கில் சில சட்டத் தடைகளை ஏற்படுத்த ” இறைவன் படைப்பில் அனைவரும் சமம் ” என்பதை ஏற்காத சிலர் முயற்சிக்கலாம்.அதைத் தாண்டி அரசியல் சட்டத்தின் உயரிய நோக்கத்தை நிறைவு செய்யும்வகையில் எடுத்துக் கொண்ட செயலை, செயலின் வித்தகர்
தமிழ்நாடு முதல்வர் , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவார், அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பான் என்று, அனைத்துசாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் நம்புகிறது.மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறது.பார் போற்றும் திமுக ஆட்சி இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தட்டும்! சமத்துவக் கொடியை உயர்த்திப் பிடித்து கருவறைத் தீண்டாமையை ஒழிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Minister pk sekar babu says all caste people become priest act should implemented within 100 days

Next Story
30 நாள்கள் ஸ்டாலின் ஆட்சி; சாதனைகளும் எதிர்ப்புகளும் என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express