இரு அணிகளும் இணையும் முகூர்த்த தேதி இன்னும் குறிக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இரு அணிகளின் இணைப்பு விழா மக்களின் ஆதரவில் மூத்த நிர்வாகிகள் தலைமையில் கூடிய விரைவில் நடைபெறும்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து இன்று பேட்டியளித்தார். அப்போது, “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை 32 மாவட்டங்களிலும் நடத்தவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விரைவில் நடக்கவுள்ளது. நாளை கலைவாணர் அரங்கில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், நில அளவை அலுவலர்கள் சங்கங்கள் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை நடத்தவுள்ளனர். அதில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் புதிய அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அம்மா மறைவில் நீதி விசாரணை வேண்டும் என்று தினகரன் சொன்னது அவருடைய சொந்த கருத்து. அம்மாவின் அரசு புனிதமான அரசு என்பது மக்களுக்கு தெரியும். அம்மா சொன்ன அந்த வழியில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர் பெருமக்கள், மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

எண்ணிக்கையை பொறுத்த அளவில் இன்றும் நாங்கள் தனி மெஜாரிட்டியில் தான் இருக்கிறோம். எடப்பாடி அரசுக்கு தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்க கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, எங்களுக்கு தான் உள்ளது. இரு அணிகளின் இணைப்பு விழா மக்களின் ஆதரவில் மூத்த நிர்வாகிகள் தலைமையில் கூடிய விரைவில் நடைபெறும்.

தினகரன் அணியின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது அவரவர்களின் விருப்பம். கடத்தி செல்வதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றும் குழந்தைகள் இல்லை. வற்புறுத்தி கடத்த வேண்டிய அவசியமும் இல்லை. கடத்தவும் முடியாது.
முகூர்த்த தேதி இன்னும் குறிக்கப்படவில்லை. ஆனால் இரு அணிகளின் இணைப்பும் சாதகமாக உள்ளது. அம்மாவின் ஆசியில் கூடிய விரைவில் அது நடக்கும்.

ஜெயலலிதா இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்பவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close