கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வழக்கறிஞர் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் குண்டு வீசியவரை பிடித்தனர். இந்நிலையில் குண்டு வீசியவர் கருக்கா வினோத் என்று தெரியவந்தது. அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஓப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வினோத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கருக்கா வினோத், முன்னதாக பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்திய போது அவரை பிணையில் எடுத்தவர் பாஜக வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். முத்தமிழ் செல்வகுமாருக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டதை குறிப்பிட்டு அமைச்சர் ரகுபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது.
இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“