அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நீண்ட நாள் சிறையில் உள்ள தண்டனை கைதிகளில் 700 கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் அறிவித்தார். ஆனால், முதலமைச்சர் அறிவித்து ஒரு மாதம் ஆன பிறகும், இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில்தான், தமிழக சட்டத் துறை அமைச்ச ரகுபதி, சமீபத்தில் திருச்சி மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “திருச்சி மத்தியச் சிறையில் 1517 தண்டனை பெற்ற சிறைவாசிகள் உள்ளனர். ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி இந்தியாவிலேயே இரண்டு சிறைகளில் மட்டும்தான் உள்ளது. ஒன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சிறைச்சாலையில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக நமது திருச்சி சிறைச்சாலையில் உள்ளது.
திருச்சி சிறப்பு முகாமில் தண்டனை காலம் முடிந்தும் யாரையும் தங்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. பாஸ்போர்ட், வெளி நாடுகளுக்குச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும் போன்ற காரணங்களால் தான் அவர்கள் இங்குத் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால், தேசத்துரோக வழக்கு, வெடிகுண்டு வழக்கு, கொடும் குற்றம் செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. இப்படி அதில் பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. இது போன்ற குற்றங்களைப் புரிந்தவர்களை தவிர்த்து விட்டு பட்டியலைத் தயாரித்து வருகிறோம். இந்த பணி முடிய 20 நாட்கள் வரை ஆகலாம்.
ஏழு பேர் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக உள்ளார். அதை அவரது லட்சியமாக வைத்துள்ளார். அவர்களை விடுதலை செய்யத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த எடுத்து வருகிறது. ஏழு பேரில் ரவிசந்திரன் என்பவரது தாயார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.
நன்னடத்தையின் அடிப்படையில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு நீண்ட நாள் சிறையில் உள்ள கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கான பட்டியலை தயாரித்துவருகிறது என்றும் அதில் தேசத் துரோக வழக்கு, மற்றும் வெடிகுண்டு வழக்கில் தண்டனைப் பெற்ற கைதிகள் இடம் பெற வாய்ப்பில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் இஸ்லாமிய கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கிறது. பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தது நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேசதுரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய சிறைவாசிகள் தவிர்த்து மற்ற சிறைவாசிகளின் பெயர்கள் மட்டும் தான் விடுதலைக்காக பட்டியலிடப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் நேற்று திருச்சியில் தெரிவித்தது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
கடந்தகால அரசுகளைப் போலல்லாமல் சிறுபான்மையினர் நலன் மீது அக்கறை கொண்டு செயல்படும் திமுக அரசு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விவகாரத்தில் கருணையுடன் நடந்துகொள்ளும் என்று சிறைவாசிகளின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த சிறுபான்மை முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், சட்டத்துறை அமைச்சரின் பதிலால் அவர்களின் எதிர்பார்ப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த விடுதலைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள். உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகள் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலுமே அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடியும் என்கிற போது, பாஜகவின் அழுத்தம் காரணமாக விடுதலைக்கான பட்டியல் தயாரிப்பிலேயே அவர்களை புறக்கணிப்பது என்பது மிகவும் பாரபட்சமானதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
சிறைக்கைதிகள் விடுதலையை பொறுத்தவரையில் அவர்களின் குற்றத்தை பார்க்காமல் குற்றவாளிகளின், அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்பதே பொது நியதி.
சிறையில் இருப்பவர்களுக்கு கருணை அடிப்படையில் விடுதலை வழங்குங்கள் என்று கூறும்பொழுது, முஸ்லிம்களுக்கு மட்டும் குற்றத்தை காரணமாக்கி அந்த கருணை என்பது கிடையாது என்ற ரீதியில் அரசு ஒவ்வொரு வருடமும் ஏமாற்றத்தையே பதிலாக கொடுத்து வருகின்றது. முஸ்லிம்கள் விஷயத்தில் அரசின் இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள், தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி வருகின்றது.
ஆகவே, தமிழக அரசு சிறைவாசிகள் விடுதலை விவகாரத்தில் பாரபட்சம் காட்டாமல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற கைதிகளைப் போல கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளின் விடுதலைக்கு போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து குடிமக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கமருதீன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியதாவது: “பொதுமன்னிப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால், தேசத் துரோக வழக்கு, வெடிகுண்டு வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு விடுதலை இல்லை என்பது பாரபட்சமானதாக இருக்கிறது. பல இஸ்லாமிய சிறைவாசிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் அமைச்சரின் பேட்டி கவலை அளிக்கிறது.
ஒரு வழக்கில் கைது செய்யப்படும் இஸ்லாமியர் மீது அவர் இஸ்லாமியர் என்பதாலேயே அவர் மீது UAPA சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்படுகிறார்கள். இதனால்தான், தேசத் துரோக வழக்குகளில் பல இஸ்லாமியர்கள் சிறையில் உள்ளனர். அதிமுக அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது நீண்ட நாள் சிறையில் இருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது, ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் அழுத்தம் காரணமாக இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவில்லை. அதனால், திமுக ஆட்சிக்கு வந்தால், தாங்கள் விடுதலை செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளித்துள்ளது.
பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்று இருந்த நிலையில், அண்ணா நூற்றாண்டின்போது, அன்றைக்கு இருந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அந்த கால அளவை 7 ஆண்டுகளாக குறைத்து கைதிகளை விடுதலை செய்தது. இப்போது, 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், தேசத் துரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு விடுதலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகள் 15 ஆண்டுகள் என பல இஸ்லாமியர்கள் சிறையிலேயே இருக்கிறார்கள். மற்ற கைதிகள் எல்லாம் விடுதலை அடையும்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது ஏன், அமைச்சர் ரகுபதி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் திமுக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேசத் துரோக வழக்கு, வெடிகுண்டு வழக்கில் தண்டனை பெற்ற கைதிகள் தவிர்த்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார். இதுவே முண்பாடாக இருக்கிறது.
தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அழுத்தங்களுக்கு பணிந்து போகாமல், கைதிகள் விடுதலையில் குற்ற வழக்குகளைப் பார்க்காமல் ராஜீவ் காந்தி வழக்கு கைதிகள் 7 பேர் மற்றும் இஸ்லாமியார்கள் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
7 பேர் விடுதலையில் திமுக உறுதியாக இருப்பதாகவும் கைதிகள் விடுதலையில், தேசத் துரோக வழக்கு மற்றும் வெடிகுண்டு வழக்கு தண்டனை கைதிகள் விடுதலை செய்ய வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது முரணாக உள்ளதா என்ற கேள்விகளும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்தன.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் தமிழ் இந்தியன் எக்ஸிரஸிடம் கூறுகையில், “தேசத் துரோக வழக்கு மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தண்டனை பெற்ற நீண்ட நாள் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யப்படும்போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அதனால், மற்ற கைதிகளின் விடுதலையும் பாதிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் அமைச்சர் கூறியிருக்கலாம். குற்ற வழக்குகளைப் பார்க்காமல் நீண்ட நாள் சிறையில் உள்ள கைதிகள் அனைவரையுமே விடுதலை செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
கைதிகள் விடுதலை குறித்தும் தேசத் துரோகம் மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளைத் தவிர்த்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்றும் 7 பேர் விடுதலையில் திமுக உறுதியாக இருக்கிறது என்றும் அமைச்சர் ரகுபதி கூறியிருப்பது முரணாக உள்ளதா என்று மனித உரிமைகள் செயல்பாட்டாளர், எழுத்தாளர் அ.மார்க்ஸ் இடம் பேசினோம். எழுத்தாளர் அ.மார்க்ஸ் கூறியதாவது: அமைச்சர் கூறியது ஒரு முரணாக இருக்கலாம். ஆனால், 7 பேர் விடுதலை என்பது ஒரு விதிவிலக்கான வழக்கு தமிழக அரசு 7 பேர் விடுதலையுடன் நீண்ட நாள் சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அமைச்சரின் பேச்சு இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கவலை அளிக்கிறது. குற்றவழக்குகளைப் பார்க்காமல் நீண்ட நாள் சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
கைதிகள் விடுதலையில் தேசத் துரோகம், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை தவிர்த்து பட்டியல் தாரித்து வருவதாக அமைச்சர் ரகுபதி கூறியது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்கிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது: “700 கைதிகள் விடுதலையில் நாங்கள் வைத்திருக்கிற கோரிக்கை என்னவென்றால், 7 பேர் விடுதலையுடன் 35 முஸ்லிம் கைதிகளின் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இந்த கோரிக்கையை அதிமுக, திமுக அரசுகளிடம் மாறி மாறி கோரிக்கை வைத்து வந்திருக்கிறோம். இது ஒரு தொடர்ச்சியான புறக்கணிப்பு. இது பாஜகவினுடைய அழுத்தம் மற்றும் உளவுத் துறையினுடைய அழுத்தத்தால்தான் சிறுபான்மை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று நாங்கள் அருதியிட்டு சொல்லி வருகிறோம்.
இந்த முறை என்ன முக்கியமானது என்றால், நாங்கள் முதலமைச்சரை சந்திக்கும்போது வலியுறுத்தியிருக்கிறோம். அதே போல, நானும் தனிப்பட்ட முறையில் அமைச்சர் ரகுபதியை சந்தித்து வலியுறுத்தி இருக்கிறேன். அதனால், இந்த அறிவிப்பு என்பது முஸ்லிம் கைதிகளும் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்ற அரசின் எண்ணத்தை வெளியிடுவதாக அமைந்துள்ளது.
இதில் நாங்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்த விடுதலைக்கு முழு தகுதி உடையவர்கள். அவர்களிடம் அதற்கான எல்லா முழு தகுதியும் இருக்கிறது.
திமுக மீது எல்லா சிறுபான்மை மக்களும் எல்லா ஜனநாயக சக்திகளும் நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கும்போது, திமுக இதில் எந்தவிதமான நிர்பந்தங்களுக்கும் அடிபணியக் கூடாது. இதுவரை அவர்கள் 28 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார்கள். ஒரு தண்டனை கைதியை நன்நடத்தையின் அடிப்படையில், பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யலாம் என்பதற்கு 7 ஆண்டு தண்டனை முடிந்திருந்தாலே போதும் என்பது முல்லா கமிஷன் அறிக்கை கூறுகிறது. ஒரு குற்றவாளி திருந்துவதற்கு 7 வருடமே போதுமானது. ஆனால், இவர்கள் 28 வருடங்களை சிறையில் கழித்திருக்கிறார்கள். அதனால், இனியும் சில சட்ட நடைமுறைகளை காரணம் காட்டுவதோ, பாஜக போன்றவர்களின் நிபந்தங்களுக்கு பணிவதோ என்பது தவறானது. அமைச்சர் ரகுபதியின் அந்த பேட்டி என்பது ஒரு வேளை இந்த 700 கைதிகள் விடுதலை செய்யப்படும்போது, முஸ்லிம் கைதிகளின் பெயர்கள் இல்லாமல் போனால், அப்போது ஒரு பெரிய கொந்தளிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, அவர்களை முன்னாலேயே சமாதானப்படுத்துகிற மாதிரி, அவர் ஏற்கெனவெ இது சொல்லப்பட்டது என்பது மாதிரியான நடவடிக்கையாக இது தோன்றுகிறது.
அமைச்சர் இப்படி சொல்லியிருப்பது நமக்கு ஒரு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால், 700 கைதிகள் விடுதலை செய்யப்படும்போது அந்த பட்டியலில் முஸ்லிம் கைதிகள் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்றுதான் நாம் அழுத்தம் தருகிறோம். அப்படி அந்த பட்டியலில் பெயர் இல்லாமல் போனால் என்ன செய்யலாம் என்பதை விவாதிக்கலாம். பட்டியல் வெளியாகும்போதுதான் திமுக இதில் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.” என்று கூறினார்.
ஏதாவது ஒரு வழக்கில் சிக்கும் முஸ்லிம்களை அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதாலேயே அவர்கள் மீது UAPA சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ-வைக் கொண்டு விசாரணை நடத்துகிறார்கள் என்ற புகார் மனித உரிமை செயல்பாட்டாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இதைப் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டபோது எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாராக் கூறியதாவது: “இது உண்மையானதுதான். இந்த 700 கைதிகள் விடுதலையிலும் முஸ்லிம் கைதிகள் அந்த பின்னணியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் மீது UAPA சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்களின் எதிர்காலம் முடக்கப்படுகிறது. அந்த சட்டத்தை மாநில சுயாட்சியை மீறி தவறான முறையில் பயன்படுத்துவதும் அதை மாநில அரசு தடுக்காமல் இருப்பதும் ஒரு முரண்பாடாகவும் பாகுபாடாகவும் இருக்கிறது.
இதில் எங்களுடைய நிலைப்பாடு UAPA சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் ஆகும். ஒரு நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கிறோம் என்ற பெயரில் ஒரு சட்டத்தை இயற்றுவது என்பது தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாநில மனித உரிமைகள் ஆணைய என்று செயல்படுகிற ஒரு நாட்டில், இது ஒரு தவறான நடைமுறை அந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ-வின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநில அரசுகள் திரள வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கையாக வைக்கிறோம். சிறுபான்மையினர் என்கிற ஒரு காரணத்துக்காக இந்த மாதிரி பொய் வழக்கு போடப்படுகிறது. இது உண்மையும்கூட… இந்தியாவினுடைய பல அதிகாரப் பூர்வமான புள்ளிவிவரங்கள் கூறுகிறது.
அதனால், திமுக அரசு இதில் நடுநிலைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். இரண்டாவது சட்டப்பூர்வ அடிப்படியில் செயல்பட வேண்டும். தகுதியுடையவர்கள் எந்த நிர்பந்தமும் இல்லாமல் செயல்பட வேண்டும். 700 கைதிகள் விடுதலையில் பாஜகவின் நிர்பந்தத்திற்கு பணிந்துவிடக் கூடாது. பாஜகவின் அழுத்தங்களுக்கு பணிவது என்பது மக்கள் நலனுக்கு எதிரானது. எனவே, திமுக அரசு சட்டப் பூர்வமாக செயல்பட வேண்டும். பத்தாண்டுகள் தண்டனையைக் கழித்த தகுதி உடைய அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.