Advertisment

+1 மதிப்பெண் இனி கணக்கில் வராது! - அமைச்சர் செங்கோட்டையன்

உயர்கல்வி படிக்க 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதும்

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
11வது வகுப்பு மதிப்பெண் உயர்கல்வியில் சேர எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது

11வது வகுப்பு மதிப்பெண் உயர்கல்வியில் சேர எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது

+1 மதிப்பெண் : உயர்கல்வி படிக்க 12ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார்.

Advertisment

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையில், பள்ளிக் கல்வித்துறை ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுவதாகவே பரவலாக சாமானிய மக்கள் கருத்தாக உள்ளது.

ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் அவர் மேற்கொள்ளும் சில அதிரடி சீர்திருத்த நடவடிக்கைகள் தான் இதற்கு காரணம். அதில் +1 பொதுத் தேர்வு திட்டமும், நிர்வாக சீர்திருத்த குழு அமைத்ததும் கல்வியாளர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிர்வாக சீர்திருத்த குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் போன்றவர்களுக்கு அதிகாரம் பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பணியிடங்களை சீர்திருத்தும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்படி ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் மூலம் பணி நிரவல் செய்து உபரி ஆசிரியர்களை காலியாக உள்ள இடங்களில் நியமித்து வருகின்றனர்.

அதன்படி 7 ஆயிரம் உபரி இடங்கள் நிரப்ப வேண்டியுள்ளது. அதற்கு பிறகு தமிழகத்தில் ஆசிரியர் பணியிடம் தேவை ஏற்படாது என்று கூறப்படுகிறது. அதனால் புதிய ஆசிரியர் நியமனங்கள் இனி இருக்காது. புதிதாக பணி அமர்த்தினால் ஏற்படும் நிதிச்சுமையும் கிடையாது. அடுத்தகட்டமாக, பள்ளிக் கல்வித்துறையை நிர்வாக வசதிக்காக 4 அல்லது 6 மண்டலங்களாக பிரிக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கு தற்போது தலா ஒரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்.

அந்த மாவட்டங்கள் தலா 4 மாவட்டங்களாக ஒன்றிணைத்து ஒரு மண்டலமாக உருவாக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். பள்ளிக் கல்வித்துறையில் சென்னை டிபிஐ வளாகத்தில் தற்போது பணியில் உள்ள 12 இணை இயக்குநர்கள் மேற்கண்ட மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். இவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வருவார்கள். இவர்கள் மேற்பார்வையில் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் கண்காணிக்கப்படும்.

இதுபோன்ற நடிவடிக்கைகளால் பள்ளிக் கல்வித்துறை நல்ல பெயரை எடுத்துக் கொண்டிருந்தது.

அதேசமயம், கடந்த ஆண்டு அறிமுக செய்யப்பட்ட +1 பொதுத் தேர்வு திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்தது. ஏற்கனவே, 10th, +2 பொதுத் தேர்வு என்று மாணவர்கள் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருக்கும் வேளையில், +1ற்க்கும் பொதுத் தேர்வு தேவையா? என்பது பெற்றோர்களின் கேள்வியாக இருந்தது. ஆனால், சில கல்வியாளர்களோ, இதை வேறு வடிவத்தில் பார்த்து வரவேற்றனர்.

அதாவது, போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவதற்கு 11வது பாடப் படிப்பை கரைத்து குடிக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தால், மாணவர்கள் கஷ்டப்பட்டாலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு அது நிச்சயம் உதவும். மேலும், நன்றாக படிக்கும் மாணவர்கள் ஒருசில காரணங்களால் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியாமல் போகும் போது, 11வது வகுப்பு மதிப்பெண் அவர்களுக்கு நிச்சயம் கைக் கொடுக்கும் என்று கருதினர்.

அதேசமயம், சில கல்வியாளர்கள் இத்திட்டத்தினை கடுமையாக எதிர்த்தனர். திடீரென மாணவர்களின் மீது இவ்வளவு சுமையை ஏற்றுவது சரியாக இருக்காது. மாணவர்களின் உடல்நிலை மற்றும் மனநிலை என இரண்டுமே இதனால் பாதிக்கும் என்று எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், "11ஆம் வகுப்பு கடினமாக இருப்பதாகவும், அதனை உயர்கல்விக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே, உயர்கல்வி படிக்க 11ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர்கல்வி படிக்கச் செல்லலாம்.

600 மதிப்பெண் வீதம் +1, +2 மாணவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் தரப்படும். +2 படிப்பில் 1200 மதிப்பெண் இனிமேல் 600ஆக குறைக்கப்படுகிறது. 600 மார்க்ஸ் என்ற அடிப்படையிலேயே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த உத்தரவு நடப்பாண்டு முதலே அமலுக்கு வருமா? அல்லது அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப்படுமா? என்ற தெளிவான அறிக்கை வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் என அனைவருமே குழப்பத்தில் உள்ளனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment