அரசு பள்ளிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கொட்டையன் உண்மை சம்பவம் ஒன்றின் மூலம் விளக்கி எடுத்துரைத்தார்.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் “சென்னையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல்” என்ற பெயரில் செவ்வாய் கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, “என் ஊரிலே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பழனிச்சாமி என்ற இளைஞர், அரசு பள்ளியில் படித்து தற்போது அமெரிக்காவில் புகழ்பெற்ற கட்டட வல்லுநராக இருக்கிறார். அவருடைய பள்ளிக்காலத்திலேயே பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து இந்த நிலைமையை அடைந்திருக்கிறார். சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த அவர், தன் மாமா வீட்டில் தான் வளர்ந்தார். ஏழ்மையான குடும்பம். அவரது மாமா, மாட்டை வைத்து செக்கு இழுக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார். இந்த மாணவர், தினமும் காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை அந்த வேலையை செய்துவிட்டு, பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு நடந்தே செல்வார். அவ்வாறு கடின முயற்சியுடன் படித்ததால், இன்று அமெரிக்காவில் புகழ்பெற்ற கட்டட வல்லுநராக திகழ்கிறார். அவருக்கு கீழே சுமார் 700 பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். கட்டடங்களை பார்வையிட அவருக்கென தனி விமானம் உண்டு. அதுபோல, அனைத்து மாணவர்களும் விடாமுயற்சியுடன் படித்து முன்னேற வேண்டும்.”, என கூறினார்.
மேலும், அப்துல் கலாம் பல இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து உயர் இடங்களை அடைந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். “அப்துல் கலாம் கூறியது போல் மாணவர்கள் கனவு காண வேண்டும். அந்த கனவுகள் நிறைவேற தமிழக அரசு துணையாக இருக்கும்.”, என கூறினார்.