கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் எஸ்பி வேலுமணி மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பிக் பாஸ்" நிகழ்ச்சி பல்வேறு விமர்சனங்களை சமீப நாட்களாக எழுப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கஞ்சா கருப்புவிடம் “சைவ உணவு சாப்பிட்டும் கோபம் ஏன்?” என நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல் "சேரி பிஹேவியர்" என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்தது போல வெளியான வீடியோவும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாசார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தது. மேலும், கமல் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இப்படி பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், "பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாசாரம் சீரழியவில்லையா? அப்போது ஏன் நடவடிக்கை எடுக்க சொல்லவில்லை? அதில் கெட்டு போகாத கலாச்சாரம் இதில் கெட்டு போகிறதா" என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழலும், லஞ்சமும் உள்ளது என குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனை சுட்டிக் காட்டி நடிகர் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பிய போது,"தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக" தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் எஸ்பி வேலுமணி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் கமல்ஹாசன் இப்போது தான் தமிழகத்தில் இருக்கிறாரா? இதற்கு முன்பெல்லாம் எங்கே சென்றார். முன்பெல்லாம் அவர் இவ்வாறு பேசுவது கிடையாது. ஆனால் சமீப காலமாக ஆதாரம் இல்லாமல் பேசி வருகிறார். ஊழல் குறித்து அவர் நிரூபிக்க தயாரா? ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசக்கூடாது. இனியாவது விபரங்களை தெரிந்து கொண்டு அவர் பேச வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், அதிமுக அரசை குறை கூறுவதை கமல்ஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். அரசை தொடர்ந்து தவறாக விமர்சனம் செய்தால் நடிகர் கமல்ஹாசன் மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும். கமல்ஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என மிரட்டல் விடுத்துள்ளார்.