நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற தமிழக அரசு அனுமதிக்காது என வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்
தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில், 23,000 ஹெக்டேர் நிலத்தை பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலமாக (பி.சி.பி.ஐ.ஆர்.) அண்மையில் அறிவித்தது. இதில், 25 குக்கிராமங்கள் கடலூர் மாவட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும்,
நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் அமைந்துள்ளன. தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திர பிரதேசம், ஒடிஷா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு அறிவிக்கப்படுவதன் மூலம், அந்த கிராமங்களில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயன பொருட்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அமைத்து, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். மேலும், அப்பகுதிகளில் 92,160 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த 19-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், இதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் அரசின்போதே பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதும், 2015-ஆம் ஆண்டில் அதற்கான கிராமங்கள் முஎடிவெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அப்போதே கடலூர், நாகை மாவட்டங்களில் 22,160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் உறுதிபடுத்தப்பட்டதாக, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்ததன் மூலம் பல்வேறு சூழலியல் சீர்கேடுகள் ஏற்படும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதன் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக மாற்ற தமிழக அரசு அனுமதிக்காது என தெரிவித்தார். அந்த மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு எந்த நிலமும் அளிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.