கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டத்தில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ பழனியப்பன் மாயமானதால் சி.பி.சி.ஐ.டி போலீசார் 2-வது நாளாக அவரை தேடி வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அணியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எனவே, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள பெண்டிங் பான் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், அங்கு தங்கியுள்ள எம்.எல்.ஏ-க்கள் எதிரணிக்கு தாவாமல் இருக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதானல், அவர்கள் விடுதிக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்களாம். மேலும், விடுதியில் தனியார் பாதுகாவலர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டிடிவி தினகரன் ஆதுரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள விடுதிக்கு கோவை பேரூர் டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமைல் போலீசார் திடீரென சென்றனர். அவர்களுடன் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி உள்ளிட்ட போலீஸார் சென்றிருந்தனர்.
நாமக்கல் காண்ட்ராக்டரும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பருமான சுப்பிரமணியம் மர்ம மரணம் வழக்கில் போலீஸார் அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனிடம் விசாரணை நடத்த அழைத்துச் வர போலீஸார் திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக விடுதியில் ஒவ்வவொரு அறையாக சென்ற போலீஸார், பழனியப்பன் தங்கி இருக்கிறாரா என்பது குறித்து சோதனை நடத்தினர். ஆனாலும், பழனியப்பன் அந்த விடுதியில் இல்லை. சோதனை நடத்துவதற்கு எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்ச்செல்வன், சோளிங்கர் பார்த்திபன், ஜெயந்தி பத்மநாபன், கதிர்காமு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் வருகையை முன்னதாகவே அறிந்து பழனியப்பன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பழனியப்பப்பன் விடுதியில் இல்லாததையடுத்து, சுமார் 3 மணி நேரம் போலீஸார் விடுதியில் நேற்று முகாமிட்டனர். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்திய மூர்த்தி தலைமையிலான போலீஸார் குடகு பகுதியில், பழனியப்பன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறும்போது: காண்ட்ராக்டர் சுப்ரமணியம் தற்கொலை வழக்கில் நேரில், விசாரணைக்கு ஆஜராகுமாறு எம்.எல்.ஏ பழனியப்பனுக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனினும், அவர் ஆஜர் ஆகவில்லை. இதனால், நீதிமன்ற உத்தரவின் பேரில் பழனியப்பனை தேடி வருகிறோம் என்றார்.
இதனிடையே, பழனியப்பன் சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூரில் உள்ள வீட்டுக்கு வந்திருக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதினர். நேற்று மாலை, அவரது வீட்டுக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினார்கள். ஆனால், பழனியப்பன் அங்கும் இல்லை. தற்போதைய நிலையில், அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ள நிலையில் இருப்பதால், அவரை தொடர்ந்து தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதனையொட்டி வருமான வரித்துறையினர் தமிழகத்தில் 35 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அவரது நெருங்கிய நண்பரான நாமக்கல், ஆசிரியர் காலனியை சேர்ந்த காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் வீடு ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சொதனை நடத்தப்பட்ட அடுத்த சில நாட்களில் செவிட்டுரங்கம்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் சுப்பிரமணியம் திடீர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தற்சொலைக்கான காரணம் குறித்து சுப்பிரமணியம் எழுதிய கடிதங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் போலீஸாரிடம் சிக்கவே, அந்த கடிதத்தில் எம்.எல்.ஏ பழனியப்பனின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இது தொடர்பாக ஏற்கனவே ஒரு முறை பழனியப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்பின்னர், நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பழனியப்பன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், பழனியப்பன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில் தான் பழனியப்பனை தேடி சி.பி.சி.ஐ.டி போலீஸார் கர்நாடகத்தில் உள்ள ரிசார்ட்டுக்கு சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.