சமையல்காரர் பெயரில் விஜயபாஸ்கர் குவாரி பரிவர்த்தனை: வருமான வரித்துறை திடுக் தகவல்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில், அவருக்கு சொந்தமான குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில், அவருக்கு சொந்தமான குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த விவகாரம் வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதும் அவரது ஆர்.கே.நகர் தொகுதியும் காலியானது. அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் தினகரன் களமிறங்கினார். தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. பணப் பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கையை எடுத்தது.

இதனையடுத்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி, தலைமை செயலாளராக இருந்த ராமமோகன ராவ் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் கடந்த ஏப்ரல் மாதம் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்கள் என அமைச்சருக்கு சொந்தமான மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து சில கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டது என்றும், முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது செய்யப்பட்ட பணப்பட்டுவாடா குறித்த தகவல்கள் சில சிக்கியுள்ளன என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. தேபோல், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமி வீட்டில் நடைபெற்ற சோதனையின் முடிவிலும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள், விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி நடத்தி வந்த குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட குவாரிகளில் கூடுதலாக 4 மடங்கு கற்களை வெட்டி எடுத்து பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமான இழப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த விவகாரங்கள் தொடர்பாக வருமானவரித்துறை அவர்களுக்கு சம்மன் அனுப்பியது. அதையடுத்து, வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகிய விஜயபாஸ்கர், அவருடைய தந்தை சின்னதம்பி, மனைவி ரம்யா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இத்தகைய சூழலில், அமைச்சருக்கு சொந்தமான குவாரியும், புதுக்கோட்டையில் உள்ள 100 ஏக்கர் விவசாய நிலங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில், அமைச்சருக்கு சொந்தமான குவாரி பரிவர்த்தனைகள் நடைபெற்று வந்த விவகாரம் வருமான வரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டு சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பணமோசடி வழக்கில் கைதாகி தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள சேகர் ரெட்டியும் கூட்டாக இணைந்து நடத்தி வந்த குவாரிகளின் பரிவர்த்தனைகள் சுப்பையாவின் பெயரில் நடைபெற்றுள்ளன.

அமைச்சரின் பினாமி ஒப்பந்ததாரராக செயல்பட்டு வந்த சுப்பையா, எஸ்ஆர்எஸ் மைன்ஸ் மற்றும் ராசி ப்ளு மெட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஒருங்கிணைத்து வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எஸ்ஆர்எஸ் மைன்சில் இருந்து எடுக்கப்படும் ப்ளு மெட்டல்களை ராசி ப்ளு மெட்டல் நிறுவனத்துக்கு செலுத்துச் சீட்டுகளை பயன்படுத்தி சுப்பையா இடம் பெயரச் செய்துள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

×Close
×Close