தமிழகத்தில் நடைபெற்று வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசு நீடிக்க கூடாது என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் மூலம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்எல்ஏ-க்கள் இன்று காலை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, திமுக எம்.பி.,கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கொறடா விஜயதாரணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன், 113 எம்எல்ஏ-க்கள் ஆதரவே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அரசு மைனாரிட்டி அரசாக மாறி விட்டது. மைனாரிட்டி அரசு நீடிக்க கூடாது என்றார்.
மேலும், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநரிடம் வைத்துள்ளோம். ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.