பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த மதுரையில் மு.க.ஸ்டாலின் ‘லேண்ட்’ ஆன அதே வேளையில், அழகிரி பாராட்டு கடிதம் தட்டி விட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 6-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி தலைவி கனிமொழி, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
‘அரசியலுக்கு அப்பாற்பட்ட நலன் விசாரிக்கும் சந்திப்பு’ என இதை திமுக மற்றும் பாஜக தரப்பில் கூறினர். அரசியலுக்கு அப்பாற்பட்ட சந்திப்பாக இது இருந்திருந்தால், கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் இது குறித்து தனது குடும்பத்தினர் தன்னிடமும் தெரிவித்திருக்க வேண்டும் என்பது அழகிரியின் ஆதங்கம்!
சமீப நாட்களாக கருத்துகள் எதையும் வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வந்த அழகிரி, பிரதமர் வருகை விஷயத்தில் தன்னை தனது குடும்பத்தினர் சீண்டிவிட்டதாக கருதுகிறார். அதன் ரீயாக்ஷன்தான் பிரதமருக்கு அவர் எழுதியிருக்கும் ஒரு கடிதம்!
அந்தக் கடிதத்தில், ‘முன்னாள் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர்’ என அடையாளப்படுத்தியிருக்கும் அழகிரி, மதுரை சத்யசாய் நகரில் உள்ள தனது இல்ல முகவரியில் இருந்து அனுப்பி வைத்திருக்கிறார். ‘ரெஸ்பெக்டட் பிரைம் மினிஸ்டர்’ என ஆரம்பித்து மூன்று பாராக்களாக ஆங்கிலத்தில் இருக்கிறது அந்தக் கடிதம்.
‘எனது பெற்றோரை நீங்கள் சந்தித்ததற்காக தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மீது நீங்கள் காட்டிய மிகப்பெரிய கரிசனத்திற்கும் அக்கறைக்கும் பெருமிதப்படுகிறேன். உங்கள் வருகை குறித்து நான் அறியாததால், சென்னையில் தனிப்பட்ட முறையில் உங்களை வரவேற்க என்னால் இயலவில்லை.
உங்கள் தனிப்பட்ட வருகையும், எனது பெற்றோரை உங்களுடன் தங்குவதற்கு நீங்கள் வைத்து அழைப்பும் அவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.’ என கூறியிருக்கும் அழகிரி, இதன்பிறகு கடைசி பாராவில் குறிப்பிட்டிருப்பதுதான் ஹைலைட்!
‘மேலும் இந்த நாட்டை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்ல உங்களது அர்ப்பணிப்பையும், இலக்கையும் நான் மனதார பாராட்டுகிறேன்’ என அரசியல் ரீதியான ‘டச்’சையும் கொடுத்திருக்கிறார் அழகிரி. பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து மதுரையில் நவம்பர் 8-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக முன் தினமே (7-ம் தேதி) மதுரைக்கு வந்தார் ஸ்டாலின். அவர் மதுரையில் ‘லேண்ட்’ ஆன தினத்தில் இந்த நன்றி மற்றும் பாராட்டு மடலை பிரதமருக்கு அழகிரி அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கியிருந்த அழகிரியை, மறுபடியும் களத்திற்குள் இறக்கி விட்டிருக்கிறார்களோ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.