கருணாநிதி இறந்தபிறகு அவரது மகன்களான மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி இடையேயான பஞ்சாயத்து என்பது அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கேற்றாற்போல் கலைஞர் கருணாநிதி இறந்து எண்ணி 21வது நாள் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட, 'அவசர அவசரமாக ஸ்டாலின் கட்சியின் தலைவராகியிருக்கிறார். திமுக உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளார்கள்' என அழகிரி விமர்சனம் செய்ய, சூடு பிடிக்கத் தொடங்கியது கோபாலபுரம் + அண்ணா அறிவாலயம்.
இருப்பினும், என்னை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயார் என அழகிரி வெளிப்படையாக அறிவித்தும், ஸ்டாலின் அதனை துளியும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மறந்தும் கூட அழகிரி பற்றி பேசிவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் மிகத் தெளிவாக இருக்கிறார்.
ஆனால், வெளிப்படையாக கேட்டும் ஸ்டாலின் வாய் திறக்கவில்லையே என்று டென்ஷனான அழகிரி, 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால், பின்விளைவுகளை அவர்கள் தான் சந்திக்க நேரிடும்' என எச்சரிக்கை விடுத்தார். அப்போதும் கூட ஸ்டாலின் தரப்பில் இருந்து அமைதி தான் பதிலாக வந்தது.
இதற்கிடையே, தனது பலத்தை நிரூபிக்க, அழகிரி கையில் எடுத்த ஆயுதம், 'அமைதிப் பேரணி'. கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் வரை தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று, தனது பலத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்த வேண்டும் என அழகிரி நினைத்தார். அதன்படி, நேற்று (செப்.5) அழகிரி தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சுமார் 1 லட்சம் தொண்டர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகச் சில ஆயிரம் தொண்டர்களே பங்கேற்றதாக கூறப்படுகிறது. 'கருப்பு' சட்டையுடன் மாஸ் காட்ட நினைத்த அழகிரிக்கு அதுவே 'கருப்பு' தினமாக அமைந்து போனது.
இதனால், அப்செட்டில் இருக்கும் அழகிரியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. அமைதியாக இருந்துவிடுவாரா?, அல்லது ஸ்டாலினுடன் எப்படியாவது இணைந்துவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கோபாலபுரம் குடும்பத்தின் பாலமாக செயல்படும் செல்வி கையில் தான் இதன் முடிவுகள் உள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்தச் சூழ்நிலையில், அழகிரிக்கு சிறு நம்பிக்கை கீற்றாய் வெளிப்பட்டிருக்கிறது மு.க.முத்துவின் வாழ்த்துக் கடிதம். கருணாநிதியின் முதல் மனைவிக்கு பிறந்தவர் மு.க.முத்து. அழகிரி, ஸ்டாலினுக்கெல்லாம் மூத்த அண்ணன். கருணாநிதியால் குடும்பத்தைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மு.க.முத்து, அழகிரியின் அமைதிப் பேரணிக்கு தன் கைப்பட வாழ்த்துக் கடிதம் எழுதி, 'என் தம்பி, அழகிரியின் பேரணிக்கு என் வாழ்த்துகள்' என்று அனுப்பியுள்ளார்.
கருணாநிதியால் புறக்கணிப்பு, உடல் நலிவு, குடும்ப ஆதரவின்மை என்று தவித்து வரும் மு.க.முத்துவுக்கு கட்சியில் எந்த வாய்ஸும் இல்லை என்பதே உண்மை. இருப்பினும், திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துச் சொல்லாமல், அழகிரியின் பேரணிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பது அரசியல் விமர்சகர்களின் புருவங்களை உயரச் செய்துள்ளது. மு.க.முத்துவின் ஆதரவை ஆமோதிக்கும் விதமாக, அழகிரி மகன் தயா அழகிரி, 'பெரியப்பாவுக்கு நன்றி' என்று ட்வீட் செய்திருக்கிறார். அப்படியெனில், இது அழகிரியின் நன்றி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே, ஸ்டாலினுக்கு எதிராக ஆட்களை தன்பக்கம் இழுக்கும் தீவிர முயற்சியில் இருக்கும் அழகிரிக்கு, அண்ணன் மு.க.முத்துவின் ஆதரவு நிச்சயம் பூஸ்ட் தான். முடியாது என்று தெரிந்தாலும், எப்படியாவது கனிமொழியையும் தன் பக்கம் இழுத்துவிட்டால் அது ஸ்டாலினுக்கு பெரிய இழப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆக மொத்தம், கலைஞரின் வாரிசுகள் யுத்தம் ஸ்டார்ட்ஸ்!