Advertisment

ஜெயலலிதாவின் படுதோல்வியை இப்போதைய அரசு மறந்துவிட்டதோ! - ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து ஸ்டாலின்

ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகளைக் கைது செய்வது பண்பாடற்ற, ஜனநாயக விரோத செயல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஜெயலலிதாவின் படுதோல்வியை இப்போதைய அரசு மறந்துவிட்டதோ! - ஜாக்டோ - ஜியோ போராட்டம் குறித்து ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜாக்டோ - ஜியோ அமைப்புகளைச் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறைப்படி நோட்டீஸ் கொடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று அறிவித்தும், எப்போதும் போல அலட்சியம் செய்து, அவர்களை அழைத்துப் பேசாமல் காவல்துறையின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை மூலம் "போலீஸ் ராஜ்" நடத்தித் தீர்வு கண்டுவிடலாம் என்று, தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் வலைவீசித் தேடுவதுபோல் தேடி, அரசு என்னும் பெரிய குடும்பத்தின் மிகமுக்கிய அங்கமான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைதுசெய்யும் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில், சாலை மறியலில் அரசு ஊழியர்கள், குறிப்பாக பெண் அரசு ஊழியர்கள் எல்லாம் இறங்கி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் குண்டுக்கட்டாகக் கைது செய்வதும், போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பே சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும், நள்ளிரவில் அநாகரிகமாக வீடு புகுந்தும், ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகளைக் கைது செய்வது பண்பாடற்ற, ஜனநாயக விரோத செயல்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை இந்த அரசு உணர மறுக்கிறது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் எனக்கருதி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அழைத்துப்பேசி சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டிய துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை பத்திரிக்கைகள் மூலம் விளம்பரம் செய்து போராட்டத்தை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறார். முதலமைச்சரோ மிக முக்கியமான இந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை, காவல்துறையை வைத்துக் கொண்டு துப்பாக்கியையும், தடியையும் காட்டிக் கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே, அரசு ஊழியர்களின் போராட்டத்தை கெடுபிடிகளை ஏவி அடக்கி - ஒடுக்கி விட்டு, பின்னர் கடும் தேர்தல் தோல்வி அடைந்த பாடத்தை “அம்மா புகழ் பாடும்” திரு. எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் திரு. ஜெயக்குமாரும் புரிந்து கொள்ளாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநிலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுப்பதை விட, வேறு என்ன முக்கியமான வேலை முதலமைச்சருக்கு இருக்கிறது என்பதும் புரியவில்லை.

ஆகவே, அடாவடி மற்றும் அராஜக நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற போராட்ட உணர்வுகளை அடக்கிவிட முடியும் என்ற தவறான மனநிலையில் இருந்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி முதலில் விடுபட வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அனைவரின் பிரச்சினைகளுக்கும் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையுள்ள அரசு ஒன்று இல்லாததால், இன்றைக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது பணிகளை விட்டு விட்டு, நடுரோட்டில் சாலை மறியல் செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க.வின் பினாமி அதிமுக அரசின் இந்தப் பிழையான மனோபாவம் முற்றிலும் அராஜகமானது மட்டுமின்றி, ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அடக்குமுறைகளை அறவே ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தீவிர சாலை மறியல் போராட்டத்தில் மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால், ஜாக்டோ - ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ள அனைவரையும் தாமதிக்காமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment