மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில், கதிராமங்கலம் தடியடி பிரச்சனை குறித்து திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது.
மேலும், குட்கா விவகாரம் தொடர்பாக திமுக-வினர் கேள்வி எழுப்பினர். ஆனால், இதுகுறித்து ஏற்கனவே முதல்வர் விளக்கம் அளித்து விட்டதால் மீண்டும் விவாதம் நடத்த அனுமதிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்தார். சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த திமுகவினர் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், குட்கா விவகாரத்தில் இன்னும் சிலர் பெயர் வெளிவரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவைக்கு வரவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது, கண் சிகிச்சைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாகவே கண்களில் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குக் கண்ணில் புரை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.