மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் 'எள்' என்றால் 'எண்ணெய்' என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த 'குதிரை பேர' ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (23-07-2017) காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு குளம், உத்திரமேரூர் தொகுதியில் உள்ள உத்திரமேரூர் குளம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட விளாகம் குளம் ஆகிய குளங்கள், திமுகழகத்தின் சார்பில் தூர்வாரி, சீரமைக்கப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு மு.க ஸ்டாலின் பதில் அளிக்கும்போது: தமிழகத்தில் (குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், விவசாயப் பெருங்குடி மக்கள் பல் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டு பல்வேறு விதமான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து, மாண்டு போன கொடுமையும் இந்த 'குதிரை பேர' அதிமுக ஆட்சியில் தொடர்கிறது.
இந்நிலையில், திமுக சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஏரிகள், குளங்களை எல்லாம் தூர் எடுக்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருந்தேன்.
காரணம், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டு இருக்கின்றன. ஆனால், அதிமுக ஆட்சி வந்த பிறகு அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. எனவே, இப்போது திமுக ஆட்சியில் இல்லையென்றாலும், அந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று, கழக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தோழர்கள் ஆகிய அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை நான் எடுத்து வைத்திருந்தேன்.
அதனை முழு மனதோடு ஏற்று, தமிழகம் முழுவதுமுள்ள கழக தோழர்கள் அனைவரும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நீர் நிலைகளை சிறப்பான முறையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பணிகளை எல்லாம் முடிந்த வரையிலும் நானே நேரில் சென்று ஆய்வு செய்து, அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறேன்.
குறிப்பாக, நேற்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகள் தூர்வாரும் பணிகள் முடிவுற்று, அவற்றை பொதுமக்கள் பயன்பட்டுக்கு அர்ப்பணித்தேன். அதைத் தொடர்ந்து, இன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர் மற்றும் செய்யூர் தொகுதிகளில் கழகத்தின் சார்பில் தூர் வாரப்பட்டுள்ள குளங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்று சொன்னாலும் இந்தப் பணிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து, பாராட்டும் வகையில் நடைபெறுவது, உள்ளபடியே தலைவர் கருணாநிதிக்கும், திமுக-வுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நாங்கள் எந்தளவிற்கு எதிர்ப்பார்த்தோமோ அதைவிட மிக சிறப்பான வகையில் திமுக-வைச் சேர்ந்த அனைவரும் தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி, இப்படிப்பட்ட சிறப்பினை கழகத்துக்கு சேர்த்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் அனைவருக்கும் திமுகவின் சார்பில் எனது பாராட்டுகளை, வாழ்த்துகளை, நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையெல்லாம் பார்த்தாவது ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீர்நிலைகளில் தூர் எடுக்கின்ற பணிகளை உடனடியாக துரிதப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்ற பணிகளில் ஈடுபட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
செய்தியாளர்: காவிரி டெல்டா பகுதியை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அங்கேயும் பெட்ரோ கெமிக்கலுக்காக இடங்கள் ஒதுக்கியிருப்பதாகவும், அதற்கு அரசு அனுமதி தந்திருப்பதாகவும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சொல்கிறதே?
மு.க ஸ்டாலின்: கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு அறிவித்திருப்பது உள்ளபடியே அதிர்ச்சியளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி., திட்டம் என்பது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களாக அமைந்திருக்கிறது. எனவே அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போராடிக் கொண்டிருக்கக்கூடிய இந்தநேரத்தில் இப்படி அறிவித்திருப்பது உள்ளபடியே வேதனை தரக்கூடிய செய்தியாக அமைந்திருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை பொறுத்தவரையில் மக்களுக்கு கொடுக்கக்கூடிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாத நிலையில், அதுவும் மத்திய பாஜக அரசு எதை சொன்னாலும் 'எள்' என்றால் 'எண்ணெய்' என்பதுபோல மாறிக் கொண்டிருக்கிறார். அதேபோல, பாஜக அரசு தான் செய்ய நினைப்பதை இன்றைக்கு மாநிலத்தில் இருக்கும் இந்த 'குதிரை பேர' ஆட்சியை பயன்படுத்தி செய்துக் கொண்டிருக்கக்கூடிய நிலைதான் உள்ளதே தவிர வேறெதுவுமில்லை.
செய்தியாளர்: டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை சந்திக்க மறுக்கும் பிரதமர், தொடர்ந்து ஊழல் புகார்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய, வருமான வரித்துறையால் குற்றம் சாட்டப்பட்டிருக்கக்கூடிய அமைச்சர்களை சந்திக்கிறாரே?
மு.க ஸ்டாலின்: நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயப் பெருங்குடி மக்களுடைய குறைகளை, அவர்களுடைய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் பாரத பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது வருமான வரித்துறையே புகார் தந்து, ஆ.கே.நகர் இடைத்தேர்தல் 89 கோடி ரூபாய் பிரச்னை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தாக்கீது அனுப்பியிருக்கிறது.
அதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா சம்பந்தமாக லஞ்சம் வாங்கியிருக்கிறார், எனவே அவர்மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வருமான வரித்துறை தாக்கீது அனுப்பியிருக்கிறது. ஆனால், குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்களை எல்லாம் இன்றைக்கு பிரதமர் சந்திக்கிறார். மக்களுடைய பிரச்னைகள், விவசாயிகளுடைய பிரச்னைகள் பற்றியெல்லாம் பிரதமர் கவலைப்படாமல் இருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது.
செய்தியாளர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் அளிக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருக்கிறது எனறு செய்திகள் வருகிறதே?
மு.க ஸ்டாலின்: இன்று தமிழகத்தின் முதலமைச்சராக 'குதிரை பேர' ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இந்தக் கேள்வியை நீங்கள் அவரிடத்தில் கேட்க வேண்டும். நான் பலமுறை இதற்கு பதில் கூறிவிட்டேன். அவர்தான் வாய் திறக்கவே இல்லை. நீங்கள் இதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
செய்தியாளர்: நடிகர் கமல்ஹாசனை வைத்து திமுக ஆட்சிக்கு வரப் பார்க்கிறது என்று பாஜக தரப்பில் சொல்லப்படுகிறதே?
மு.க ஸ்டாலின்: 'கலைஞானி' திரு. கமல்ஹாசனை பொறுத்தவரையில், அதிமுக ஆட்சியில் நடந்து வரும் ஊழல்களைப் பற்றி சொல்லி வருகிறார். ஆனால், அதற்கு பாஜக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருக்கிறது. கமல் பேசுவது தவறு என்று சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஊழல் செய்துக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியும், அதற்கு துணை நிற்கும் பிஜேபியும் ஏதோ ஒரு கூட்டு வைத்திருப்பது போல தெரிகிறது, அதுதான் இதிலிருந்து புலப்படுகிறது.
செய்தியாளர்: திமுக தொடர்ந்து பல்வேறு ஏரிகளை, குளங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் உள்ள புழல் ஏரி வறண்டு, தண்ணீர் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
மு.க ஸ்டாலின்: திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க வேண்டும் என்பதற்காக நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவந்தோம். ஓரளவிற்கு அதை வைத்து சமாளித்தோம்.
ஆனால், இதே அதிமுக ஆட்சியில் திட்டங்களை அறிவிக்கிறார்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவரப் போகிறோம் என்று அறிவிக்கிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் அறிவித்தார்கள். இப்போதிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கிறார். அறிவிக்கின்ற அறிவிப்புக்கள் எல்லாம் அறிவிப்பாகவே இருக்கிறது.
அதனால்தான் நான் சட்டமன்றத்தில், "110 அறிவிப்புகள் என்ன நிலையில் இருக்கிறது என்று வெள்ளை அறிக்கையாக சட்டமன்றத்தில் வையுங்கள். இல்லையென்றால் 'அஷ்யூரன்ஸ் கமிட்டி' என்றழைக்கப்படும் உறுதிமொழிக் குழுவிற்கு முன்பாக வையுங்கள். அப்போது, என்ன திட்டங்கள் நடந்திருக்கிறது என்று கேட்கலாம்", என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஆனால் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, அவை நிறைவேற்றப்படவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு மாநில அரசுக்கு ஒதுக்கிய அந்த நிதியை திருப்பி அனுப்பியிருப்பதாக இன்றைக்கு செய்தி வந்திருக்கிறது. அந்த நிலையில் தான் இந்த ஆட்சி இருக்கிறது.
தமிழக விவசாயிகள் பிரச்னை பற்றியோ, நாட்டில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு பற்றியோ மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழக மக்களைப் பற்றியும் இந்த ஆட்சி கவலையே படவில்லை. எப்படியெல்லாம் கொள்ளையடிக்கலாம், இருக்கும் எம்.எல்.ஏ.,க்களை திருப்திபடுத்தி, சம்பளத்தை உயர்த்தி, கமிஷன் கொடுத்து, லஞ்சம் கொடுத்து, பேரம் நடத்தி அவர்களை தக்கவைத்து, ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கொள்ளையடிக்க வேண்டும் என்று இந்த ஆட்சி கவலைப்படுகிறதே தவிர வேறு எதுபற்றியும் கவலைப்படவில்லை.
செய்தியாளர்: தமிழக அரசின் பாடப்புத்தக அட்டைகளால் செய்யப்பட்ட 'பேப்பர் பிளேட்டுகள்' ஆந்திராவில் விற்பனையாவதாக செய்திகள் வருகிறதே?
மு.க ஸ்டாலின்: அது பற்றியெல்லாம் கவலைப்படாத நிலையில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியை எப்படி தக்கவைத்துக் கொள்வது, அதற்காக 'குதிரை பேர' ஊழலை எப்படித் தொடர்வது என்ற நிலையில்தான் இந்த ஆட்சி நடந்து கொண்டிருகிறது. எனவே, அதுபற்றியெல்லாம் இந்த ஆட்சி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.