‘புகழ்’ வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் இழுக்க மோடி முயற்சி : மு.க ஸ்டாலின்

அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களே கூட, டெல்லி எஜமானர்களின் காலில் விழுந்து கிடக்கும் இந்த குதிரைபேர ஆட்சி எப்போது தொலையும் என எதிர்பார்த்துள்ளனர்

தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றிவிடமுடியுமா என பின்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் பிரதமர் மோடி அவர்கள் அந்த நினைவு மண்டப திறப்பு நிகழ்வில், நூற்றாண்டு காணும் எம்.ஜி.ஆர் பற்றியும், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா பற்றியும் ‘புகழ்’ வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப இயலுமா என முயற்சி செய்திருக்கிறார் என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முக ஸ்டாலின் விடுத்துள்ள மடலில் தெரிவித்துள்ளதாவது: என் உயிருடன் கலந்த தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் நன்றி கலந்த கோரிக்கை மடல்.

தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் வகையில், நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி தோழமைக் கட்சிகளின் துணையுடனும், நீட் தேர்வை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சியினர்-அமைப்பினர்- மாணவர்களின் ஒத்துழைப்புடனும் தி.மு.கழகம் முன்னெடுத்த மனித சங்கிலி போராட்டத்திற்கு, மாநிலத்தை ஆள்பவர்களும் ஆதரவளித்திருக்க வேண்டும்.

காரணம், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றியது இதே அ.தி.மு.க. ஆட்சிதான். இப்போதும் தொடர்கின்ற இந்த குதிரை பேர பினாமி ஆட்சி, நீட் தேர்வின் பிடியிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றுவோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

அதனால், எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு நேரடி ஆதரவு அளிக்காவிட்டாலும், ஜனநாயக முறையிலான இந்தப் போராட்டத்திற்கு அனுமதி அளித்து தார்மீக ஆதரவினையாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், உதட்டளவில் நீட் எதிர்ப்பைக் காட்டிவிட்டு, உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் அடிமைத்தனத்தை தங்களின் டெல்லி எஜமானர்களுக்கு வெளிப்படுத்தும் விதத்திலேயே அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான், நீட் தேர்வை எதிர்க்கும் தி.மு.க. மற்றும் தோழமை சக்திகளின் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குதிரைபேர அ.தி.மு.க. அரசு, நீதிமன்றத்திலேயே தனது நிலையை தெரிவித்திருக்கிறது.

மக்கள் நலனை மறந்த அ.தி.மு.க அரசின் இந்த இரட்டை வேடம் மக்கள் மன்றத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது. கூவத்தூர் குதிரை பேரம் தொடங்கி குட்கா விவகாரம் வரை நடைபெற்று வரும் ஊழல்கள் அனைத்தும் ஆதாரங்களுடன் அம்பலமாகி வரும் நிலையில், இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஆட்சி நீடிக்கும் என்ற பதற்றத்தில், ‘எல்லாத் துறையிலும் ஊழல் – எல்லாத் திட்டத்திலும் கொள்ளை’ என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஆட்சியாளர்களுக்கு, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கூட நேரமில்லை. அந்தப் பணியை எதிர்க்கட்சியான தி.மு.கழகம், முன்வந்து மேற்கொண்டிருக்கிறது.

பருவமழை பொய்த்து, குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், கிடைக்கின்ற நீரை வீணடிக்காமல் சேமித்து, நிலத்தடி நீரின் அளவை உயர்த்தி, குடிநீர் தேவையை சமாளிக்கிற வகையில் தமிழகத்தின் பல இடங்களிலும் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை என்னுடைய அன்புக்கட்டளையை ஏற்று கழகத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அவரது எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரத்தை அடுத்த எருமைப்பட்டியில் உள்ள கச்சராயன்குட்டை ஏரியை கழகத்தினர் தூர்வாரி, கரைகளை செப்பனிட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு சீரமைத்த நிலையில், குதிரைபேர ஆட்சியாளர்கள் அந்த ஏரியின் கரைகளை தகர்த்து சிதைத்ததை பார்த்து பொதுமக்கள் அச்சமும் ஆத்திரமும் கொண்டனர்.

ஆளுங்கட்சி செய்ய மறந்த பணியை எதிர்க்கட்சி மேற்கொண்டிருக்கிற நிலையில், அதற்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கக்கூடாதா என்று முதலமைச்சர் எடப்பாடி தொகுதி மக்களே கேள்வி எழுப்பும் சூழல் உருவானது. கேள்வி கேட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு, மண்ணைத் திருடி வியாபாரம் செய்து மாளிகை கட்டும் ஆளுங்கட்சியினருக்கு ஊழல் வெறி தலைக்கேறியிருந்தது.

இத்தகைய சூழலில், கச்சராயன் ஏரியைப் பார்வையிட்டு அதனை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி விட்டு, சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மனித சங்கிலிப் போராட்டத்தில் கழகத்தினருடனும் தோழமைக் கட்சியினருடனும் மிகக் குறிப்பாக, மாணவர்களுடனும் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்கலாம் எனத் திட்டமிட்டு, கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், நான் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறி காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர்.

ஏரியைத் தூர்வாருவதும், அதனைப் பார்வையிடுவதும் இந்த ஆட்சியில் பெருங்குற்றமா எனக் காவல்துறையினரிடம் கேட்டபோது, நீட் தேர்வுக்காக நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தான் முன்னெச்சரிக்கையாக கைது செய்கிறோம் என்றார்கள்.

கும்பகோணத்தில் கோலம் போடுவதற்காக குடவாசலிலேயே குனிந்துவிட்டாள் என்று ஊர்ப்புறத்திலே சொல்வார்கள். அதுபோல, சேலத்தில் மாலையில் நடைபெறும் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்காக கோவையில் காலையிலேயே கைது செய்த காவல்துறையினரின் கடமையுணர்ச்சியையும் அவர்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியாளர்களின் நீட் எதிர்ப்பு இரட்டை வேடத்தையும் கண்டு மெய்சிலிர்த்தது.

கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் நான் கைது செய்யப்பட்ட நிலையில், கழகத்தினர் யாரும் இது கண்டு பதற்றப்படாமல், மாலையில் நடைபெறவேண்டிய மனித சங்கிலிப் போராட்டத்தை மாவட்ட தலைநகரங்கள் அனைத்திலும் வீறு கொண்டு நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தேன்.

அன்பு வேண்டுகோளை ஏற்ற தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், சென்னையில் தொடங்கி குமரி வரை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டத்தை எழுச்சியுடன் நடத்தி, மாணவர்களின் எதிர்கால நலனுக்காக என்றும் துணை நிற்போம் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்கள்.

கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் தன் குருதியுடன் கலந்த சமூக நீதி உணர்வின் வெளிப்பாடாக முதுமையில் பிடரி சிலுப்பும் சிங்கமென மனித சங்கிலி போராட்டத்தில் இணைந்திருந்த காட்சி, இந்த இயக்கத்தின் கொள்கை உணர்வும் வலிமையும் எத்தகையது என்பதற்கான எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

கழக முன்னோடிகள் பலரும் தங்களது மாவட்டங்களில் மிக சிறப்பான முறையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து, தோழமைக் கட்சிகள் மற்றும் நீட் தேர்வை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சியினர்-அமைப்பினர்- மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர்.

தமிழக மாணவர்களின் எதிர்கால நலன் காக்கவும் நீட் எனும் கொடுமையின் விளைவுகளால் பாதிக்காமல் இருக்கவும் சீனப் பெருஞ்சுவர் போன்ற தடுப்பரணாக மனித சங்கிலி அமையவேண்டும் என தமிழகத்தில் உள்ள பல கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் தி.மு.கழகம் விடுத்த அழைப்பினை ஏற்று இதில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கி, மனித சங்கிலி போராட்டத்தை பெரும் வெற்றி பெறச் செய்த அனைத்து தலைவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வை அரசாங்கமே எதிர்ப்பதாக சொல்லும் நிலையில், அதற்கானப் போராட்டத்துக்கு அனுமதி தராமல், என்னை கைது செய்ததைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட தமிழகத்தின் ஜனநாயக சக்திகளுக்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.

மாணவர் நலனுக்காக, சாலையோரமாக நடத்தப்பட்ட மனித சங்கிலிப் போராட்டம், மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்ததாக பொய்க்காரணம் கூறி பல இடங்களிலும் வழக்குப் பதிவு செய்து தனது இரட்டை வேட கபட நாடக அரசியலை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரைபேர அரசு வெளிப்படுத்தியுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கம் ஆட்சியாளர்களின் உள்ளத்தில் உண்மையாகவே இருக்குமேயானால், கழகமும் தோழமைக் கட்சியினரும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்திய அதே நாளில்தான், மாணவர்களின் மனதில் நிற்கும் அறிஞரான முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் நினைவு மண்டபத்தை திறக்க பிரதமர் தமிழகம் வந்தார். அவர் பங்கேற்ற அதே மேடையில் பேசிய முதலமைச்சர் அவர்கள், நீட் தேர்வு குறித்துப் பேசி, மாணவர்களின் எதிர்கால நலனுக்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றிவிடமுடியுமா என பின்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் பிரதமர் மோடி அவர்கள் அந்த நினைவு மண்டப திறப்பு நிகழ்வில், நூற்றாண்டு காணும் எம்.ஜி.ஆர் பற்றியும், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா பற்றியும் ‘புகழ்’ வார்த்தைகள் கூறி, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப இயலுமா என முயற்சி செய்திருக்கிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களே கூட, டெல்லி எஜமானர்களின் காலில் விழுந்து கிடக்கும் இந்த குதிரைபேர ஆட்சி எப்போது தொலையும் என எதிர்பார்த்துள்ளனர் என்பதே உண்மை நிலவரம்.

தங்கள் வீட்டுக் குழந்தைகளின் எதிர்கால கனவுகளை நொறுக்கும் நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய பா.ஜ.க. அரசையும், அதனை எதிர்க்க துணிவில்லாமல் இரட்டை வேடம் போடும் அ.தி.மு.க அரசையும் ஒரு சேர வெறுக்கிறார்கள். கடந்த முறை அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்களும் கூட தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களைப் பங்கேற்கச் செய்ததை தமிழகத்தில் பல பகுதிகளிலும் காண முடிந்தது.

மக்களின் நலன் கருதி பொதுப்பிரச்சினைகளில் ஒன்றிணைந்து நிற்போம் என்று உணர்த்தும் வகையில் கழகமும் தோழமைக் கட்சிகளும் நடத்திய இந்த மனித சங்கிலி அறப்போராட்டம் ஒரு தொடக்கம். நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்கள் முழுமையாக விடுபடவும், மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட எந்தவொரு படிப்புக்கும் இத்தகைய நெருக்கடிகள் உருவாகாமல் தடுக்கவும் அறப்போராட்டங்கள் தொடரும்.

கோவையில் என்னுடன் கழக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட காரணத்தால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மனித சங்கிலிப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் போராட்டமும், அடுத்தடுத்த கட்டப் போராட்டங்களும் விரைவில் நடைபெறும்.

நீட் எனும் கொடுங்கரத்திலிருந்து மாணவர்களை காக்கவும், இரட்டை வேட அ.தி.மு.க. அரசை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக்காட்டவும் தொடர்ந்து களம் காண்போம். ஜனநாயக முறையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

×Close
×Close