பாஜக தலைமையிலான மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவற்றை முடுக்கிவிட்டு, அதிமுக-வை முதலில் உடைக்க முயற்சி செய்தது. பின்னர் இணைக்க முயற்சி செய்து இந்த மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை அப்படியே நிலைகுலைய வைத்திருக்கிறது என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது: தமிழக விவசாயிகள் தொடர் தற்கொலை செய்து கொள்கின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால், காவிரி டெல்டா பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
லட்சக்கணக்கான மாணவர்களின் கனவு நீட் தேர்வால் கேள்விக்குறியாக மாறியுள்ளது. வறட்சியின் பிடியால் சிக்கியுள்ள மக்கள் ஆங்காங்கே காலிக்குடங்களுடன் குடிநீருக்காக தவிக்கும் நிலை உருவாகி, மத்திய அரசின் நிதியும் கிடைக்காமல் எங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் விடுக்கும் கோரிக்கை குறித்து துளி கூட மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக அரசின் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. இது குறித்து மத்திய அரசுக்கு கவலை இல்லை. ஆனால் மத்திய அரசில் உள்ள வருமான வரித்துறை அமலாக்கத்துறை, இப்போது போதாக்குறைக்கு தில்லி போலீஸ் என அனைத்து விதமான ஏஜென்சிகளையும் பாஜக அரசு முடுக்கிவிட்டு அதிமுக-வை முதலில் உடைக்க முயற்சி செய்தது. பின்னர் இணைக்க முயற்சி செய்து இந்த மாநிலத்தின் அரசு நிர்வாகத்தை அப்படியே நிலைகுலைய வைத்திருக்கிறது.
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் திமுக-வுக்கு எப்போதுமே உடன்பாடு உண்டு. ஆனால், வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என அனைத்துமே ஒரு கட்சியை உடைக்க முயற்சிப்பது ஏன்? அன்புநாதன் வீட்டில் சோதனை, திருப்பூரில் கண்டெய்னரில் ரூ.500 கோடி பரிமுதல், அதிமுக அரசின் மணல் ஊழல், சேகர்ரெட்டியின் மீது சிபிஐ, வருமான வரித்துறை நடத்திய சோதனைகளும் காணாமல் போயின.
ஆர்கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மட்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதில், வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி ரூபாய் வழங்க இருந்ததாக பட்டியல் கைப்பற்றப்பட்டது. அந்த பட்டியலில் இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது சிறிய அளவிலான விசாரணையை கூட முன்னெடுக்காதது ஏன்?
தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்கள் வீட்டில் சோதனை, ஐஏஎஸ் அதிகாரிகளை பீதியில் உறையவைத்தது ஏன்? தமிழக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர் பிரச்சனையால் தமிழக மக்கள் பாதிப்பு உள்ளிட்ட எதிலும் மத்திய அரசு வேகம் காட்டவில்லை.
அதிமுக-வின் ஊழல் அணிகளை இணைப்பதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒரு சதவீதம் கூட தமிழக மக்களின் பிரச்சனைகளை தடுக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை. ஏன் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதால் தானா?
இவற்றையெல்லாம் பாஜக மறுக்கும் என்றால் இதுவரை அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்டுள்ள சோதனைகள், அதில் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் சட்ட அமைப்புகளின் நேர்மைத் தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவேன் என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த பிரதமர், இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜக-வினால் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் அரசியல் சட்டப்படியான நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக்குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் பிரதமர் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.