இடைத் தேர்தல் ஆதரவு: கமல்ஹாசனுக்கு ஸ்டாலின்- கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி - MK Stalin and KS Alagiri thanks to Kamal Haasan for support to Congress in Erode East By-election | Indian Express Tamil

இடைத் தேர்தல் ஆதரவு: கமல்ஹாசனுக்கு ஸ்டாலின்- கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

MK Stalin thanks to Kamal Haasan, Makkal Needhi Maiam, MNM, KS Alagiri thanks to Kamal Hasan, EVKS Elangovan, Erode East by-elections

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த திங்கட்கிழமை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார்.

இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதன்கிழமை (ஜனவரி 25) காலை 11.30 மணிக்கு தலைவர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் அவசர நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது: “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.வெ.கி.ச. இளங்கோவனை ஆதரிப்பது எனும் முடிவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிருக்கும் அரசியல் சூழலில் மதவாத சக்திகள் முழு பலத்துடன் எதிர்க்கப்பட வேண்டியவைகள் என்பதை கருத்தில் கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை மக்கள் நீதி மய்யம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையும், இறையாண்மையும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதை முற்றிலும் உணர்ந்து மதவாத, வகுப்புவாத சக்திகளை வீழ்த்த வேண்டுமென்பதில் கமல்ஹாசனுக்கு இருக்கிற தீவிரத்தன்மையை மனதார பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.

ஜனநாயக சக்திகளின் குரல்வளையும், கருத்துரிமையும் ஒடுக்கப்படுவது குறித்தும், மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், தீவிரமான கருத்தை மக்கள் நீதி மய்யம் வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இந்திய நாடு இதுவரை காணாத வகையில் அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக நிறுவனங்களும் அச்சுறுத்தப்படுகிற இக்கால கட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது.

சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மீண்டும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin and ks alagiri thanks to kamal haasan for support to congress in erode east by election