scorecardresearch

அரியலூர் மருத்துவக் கல்லூரி புதிய அரங்கிற்கு மாணவி அனிதா பெயர்: ஸ்டாலின் உத்தரவு

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி புதிய அரங்கிற்கு மாணவி அனிதா பெயர்: ஸ்டாலின் உத்தரவு

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரியலூர் மாவட்டத்தில் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த கூலித் தொழிலாளியின் மகளான அனிதா சிறுமியாக இருந்தபோதே அவரின் தாயார் இறந்துவிட்டார். தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், மத்திய அரசு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவித்ததால் மனமுடைந்தார்.

ஏழை கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்குத் தேவையான விலையுயர்ந்த நீட் தேர்வு பயிற்சிகளை பெறுவது சாத்தியமில்லை என்பதையும், 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மருத்துவ சேர்க்கை தேர்வுகள் நடத்தப்பட்டால் மட்டுமே, தன்னை போன்ற கிராமப்புற மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற முடியும் என்பதையும் உணர்ந்து, நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என அனிதா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, தீர்ப்பு வெளியான ஒன்பது நாட்களில் அனிதா தனது இன்னுயிரை 2017 செப்டம்பர் 1-ம் நாள் மாய்த்துக் கொண்டார். அவரது மரணம் நீட் தேர்வு முறையின் கொடூரத்தை உலகுக்கு உணர்த்தியது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைந்த அரசு செயலாளர்கள் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழக அரசு, சட்டமன்றத்தில் நீட் எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநரால் அம்மசோதா திருப்பி அனுப்பப்பட்டது. மீண்டும் அந்த மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் தர வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகம் 2022 ஜனவரி 12-அன்று முதல்வர் முன்னிலையில் இந்தியப் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த புதிய மருத்துவக் கல்லூரியில் நவீன மருத்துவமனை கட்டப்பட்டு, இம்மாவட்ட மக்களின் நலனிற்காக இன்று திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வேளையில் நீட் எனும் தேர்வினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நிகழ்த்தி, தனது இன்னுயிரை இழந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்டம், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk stalin anitha name for ariyalur student mbbs